×

ஓசூரில் திருவையாறு கர்நாடக இசை விழா

ஓசூர், டிச.30:பாரம்பரியமிக்க திருவையாறு என்ற கர்நாடக இசை கச்சேரி ஓசூரில் கடந்த 2 நாட்கள் நடந்தது. ஓசூரில் திருவையாறு நிகழ்ச்சியை ஓசூர் குறிஞ்சி நுண்கலை மையத்தின் தலைவர் மனோகரன் மற்றும் கனரா மியூச்சுவல் பண்ட் தலைவர் பாலசுப்பரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து மனோகரன் நிருபர்களிடம் கூறியது: சென்னை மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத இசை விழாவை போன்று, ஓசூர் குறிஞ்சி நுண்கலை மையத்தின் சார்பில், ஓசூரிலும் மார்கழி மாதத்தில் இசை விழாவை ஆண்டுதோறும் நடத்தி, புகழ்பெற்ற இசை வல்லுநர்களை கவுரவிக்கவும், புதிய இசைக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வாய்ப்பளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் திருவையாறு என்ற பெயரில் இந்த இசை விழா, ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள ஏசியன் கிறிஸ்டீன் பள்ளி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் 7 பிரபல சங்கீத வல்லுநர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞர் அனில் சீனிவாசன் பங்கேற்று பார்வையற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண்களை கட்டிக் கொண்டு பியானோ வாசித்தார். 2ம் நாளில் ஓசூரில் உள்ள திறமை வாய்ந்த இசைக்கலைஞர்களை அடையாளம் காணும் வகையில், 5 உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், ஐஎன்டியுசி மாவட்ட துணை தலைவர் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvaiyaru Carnatic Music Festival ,Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...