×

ரயில்வே கேட் அடிக்கடி அடைப்பால் பணி தாமதம் மாவட்டம் முகப்பு பணிகள் முடிவது எப்போது போக்குவரத்து நெரிசலால் திணறும் மேலூர் பஸ் ஸ்டாண்ட்

மேலூர், டிச. 30:   மேலூர் பஸ் ஸ்டாண்ட்டின் சேதமடைந்த முகப்பை சரி செய்யும் பணி நீண்ட நாட்களாக நடப்பதால் தினசரி பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலூர் பஸ் ஸ்டாண்டின் முகப்பில் சில வருடங்களுக்கு முன்பு முகப்பு வளைவு அமைக்கப்பட்டு, அதில் பென்னிகுக் பெயர் பொறிக்கப்பட்டது. அவசர அவசரமாக நகராட்சியில் தீர்மானம் போட்டு இப்பணிகள் சில நாட்களிலேயே முடிக்கப்பட்டது.
இதனால் தரமற்ற வகையில் முகப்பில் ஒட்டப்பட்ட டைல்ஸ்கள் அவ்வப் போது பெயர்ந்து விழுந்து வந்தது. இது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது பலமுறை விழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் புகார் அளித்தும் நகராட்சி கண்டு கொள்ளவே இல்லை. புகார் கலெக்டர் வரை செல்லவே, கலெக்டர் வினய் உடனடியாக பஸ் ஸ்டாண்டின் பெயர்ந்து விழும் முகப்பை சரி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியை மறைத்து கம்புகளை கொண்டு மறைத்து தடுப்பு அமைக்கப்பட்டது.

ஏற்கனவே மேலூர் பஸ் ஸ்டாண்ட் ஒரு வழிப் பகுதியாக செயல்பட்டு வந்தது. ஒரு பகுதியில் மேலூரில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் வெளியேறுவதும், உள்ளே வருவதுமாக இருந்தது. மற்றொரு வாசலை பயணிகள் உள்ளே சென்று வர பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு அப்பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டதால், பயணிகள் பஸ்கள் வந்து செல்லும் அதே பகுதியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடந்து செல்லும்போது பஸ் சட்டென உள்ளே நுழைந்து விடுவதால், அவர்கள் தடுமாறி கீழே விழுந்து எழும் நிலை தினசரி ஏற்படுகிறது.

பஸ் ஸ்டாண்டிற்கு முதன் முறையாக வரவேற்பு வளைவு அமைத்தபோது மிக குறைந்த நாளில் அமைத்தவர்கள், தற்போது ஒரு பகுதியையே மறைத்து இத்தனை நாட்கள் ஒட்டு போடும் பணியை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் கூறினர். விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என மேலூர் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : District ,Home Work Completion ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...