×

7 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

பழநி, டிச.30: பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று 339 வாக்குச்சாவடிகள் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடக்கிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. கடந்த 27ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது. இன்று 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, தொப்பம்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் உட்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. பழநி ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன.

பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு பதவிக்கு வெள்ளை, ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு பிங்க், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு இளம் பச்சை, மாவட்டக்குழு உறுப்பினர் மஞ்சள் நிறம் என 4 விதமான வாக்குகள் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்கு தேவையான வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல், வாக்காளர் விரலில் வைக்கப்படும் அழியாத மை, பென்சில், பேனா, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளிட்ட 56 வகையான பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பழநி சப்.கலெக்டர் உமா தலைமையிலான வருவாய்த்துறையினர் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை அனுப்பும் பணியை கண்காணித்தனர். இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பழநி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான 15 வார்டுகளுக்கு 98 பேர் போட்டியிடுகின்றனர். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான 20 வார்டுகளுக்கு 102 பேர் போட்டியிடுகின்றனர். பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிமன்றங்களின் தலைவர் பதவிக்கு 111 பேர் போட்டியிடுகின்றனர். தொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் தலைவர் பதவிக்கு 168 பேர் களத்தில் உள்ளனர்.

பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 694 பேர் போட்டியிடுகின்றனர். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 38 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 742 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான வாக்குப்பதிவு அந்தந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது. பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் காவலப்பட்டி, பாப்பம்பட்டி, சிவகிரிப்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஆண்டிபட்டி, கோதைமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள சில வாக்குச்சாவடிகள் பதட்டமானவையான கண்டறியப்பட்டுள்ளன. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மானூர், தும்பலப்பட்டி, வடபருத்தியூர் உட்பட 15 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு வழக்கத்தை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழநி மற்றும் ஒட்டன்சத்திர பகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவிற்கு சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக டிஎஸ்பி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Tags : Voting ,
× RELATED 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு