×

களத்தில் 2,772 வேட்பாளர்கள் பயணிகள் கட்டணத்தை உயர்த்த ரயில்வே திட்டம்?

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ரயில்வே நிதிநிலை தொடர்பான அறிக்கையை (எண் 10 ) ஐ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2017-18 நிதியாண்டு ரயில்வே நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது. சந்தித்த நஷ்டம் ரூ. 5676 கோடி. அடுத்துவரும் 2018-19 நிதியாண்டு சரக்கு கட்டணம் ரூ.5ஆயிரம் கோடியை முன்கூட்டியே தேசிய அனல் மின் கழகத்திடம் பெற்றும், ரயில்வே கட்டுமானக் கழகத்திடம் முன் தொகையாக ரூ.2580 கோடி பெற்றும் லாபமாக கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது என்று அதில் தெரிவித்து உள்ளார். மேலும் ரயில்வே வழங்கும் 53 சலுகைகளால் இழப்பு ஏற்படுகிறது என்றும், பயணிகள் கட்டண இழப்பை சரக்கு வருவாய் ஈடு செய்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
இதனையடுத்து பயணிகள் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. ரயில் கட்டணம் உயர்த்தும் திட்டம் அரசியல் எதிர்ப்புகளையும், பொது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கட்டணம் உயர்வு அவசியம்தானா?. தேவையற்றதா ? என பயணிகள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் கூறியதாவது:

ரயில்வே உபயோகிப்பாளர் மன்னை மகேந்திரன்: நடைமேடை மற்றும் குறைந்தபட்ச பயணக் கட்டணம் ரூ.5 ஆக இருந்தது ரூ.10 ஆக நவம்பர், 2015ல் உயர்த்தப்பட்டது. தட்கல் டிக்கெட்டுகளில் பாதி எண்ணிக்கையில் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளாக மாற்றி டைனமிக் கட்டணத்தில் விற்கப்படுகிறது. நான்கு மடங்கு வரை கூடுதல் கட்டணம் செலுத்துகிறோம். முன்பதிவு பெட்டிகளின் அனைத்து சைடு இருக்கைகளை யும் “ஆர்.ஏ.சி” யாக மாற்றி படுக்கை கட்டணம் வசூலித்து உட்காரும் சீட்டை மட்டுமே தருகிறார்கள். மிக அறிதாக பர்த் கிடைக்கிறது. எனவே ரயில்வே நிர்வாகம் உத்தேசித்துள்ள கட்டணம் கூடுதல் சுமையை கைவிட வேண் டும் என்றார்.

இளம்தொழில் முனைவோர் மேலதிருப்பாலக்குடி பிரபு: பயணத்தை கடைசி நேரத்தில் 2 அல்லது 3 மணி நேரம் முன் ரத்து செய்தால் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட ரயில்வே திரும்ப தருவதில்லை. அதே நேரம் அந்த பர்த்தை கரண்ட் புக்கிங்கில் வேறு ஒரு பயணிக்கு விற்று எடுத்துக் கொள்கிறது. ஒரு பர்த்துக்கு இரண்டு பயணிகளிடம் வசூல் செய்கிறது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது கிடையாது. மாறாக சிறப்பு ரயில்களை ஸ்வீதா கட்டணத்தில் இயக்கி ஆம்னி பஸ்களை போல் காசு பார்க்கிறது. சாதாரண பயணிகள் ரயில் கட்டணங்களை தவிர மற்ற அனைத்து கட்டணங்களும் ஏற்கனவே உயர்த்தப் பட்டுவிட்டது. நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர்கள், சிறு குறு தொழில் முனைவோருக்கு ரயில் பயணம் இனி கையை கடிப்பது நிச்சயம் என்றார்.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர்
மனோகரன்: ரயில்வே வருவாயில் 46.70 சதவீதம் சரக்கு கட்டணம். இதர பிரிவு வருவாய் 6.09 சதவீதம், மத்திய சாலை நிதியில் கிடைக்கும் டீசல் (செஸ்) வரி பங்கு 1.59 சதவீதம், வெளி மூலதனம் 12.70 சதவீதம், அரசு ஒவ்வொரு துறைகளுக்கும் வழங்கும் பட்ஜெட் நிதியில் ரயில்வே பெறும் பங்கு 14.13 சதவீதம். இது போக மீதமுள்ள 18.79 சதவீதம் மட்டுமே பயணிகள் பிரிவால் ரயில்வேக்கு கிடை க்கும் வருவாய். மொத்த ரயில்வே வருவாயில் பயணிகள் கட்டண வருவாய் என்பது ஐந்தில் ஒரு பங்கை விட குறைவு. ஒரு பயணி ஒரு கி.மீ பயண வருவாய் என்பது புறநகர் அல்லாத ரயில்களில் 43.40 பைசாவில் இருந்து 44.58 பைசாவாகவும், புறநகர் மின்சார ரயில்களில் 18.49 பைசாவில் இருந்து 18.76 பைசாவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் கூடி இருக்கிறது. இது தவிர ராஜதானி, சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் பிளக்ஸி கட்டணம் நடைமுறைப் படுத்தியதில் பயணிகள் வருவாய் 5 சத வீதம் அதிகரித்து இருக்கிறது.

ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதை காரணம் காட்டி ரயில்வே பொதுத்துறை நிறுவனங்கள் தந்து வந்த டிவிடென்ட் தொகையை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. வருவாயை எடுத்துக் கொள்ளும் அரசு அதே நேரம் ரயில்வே ஊழியர்களுக்கான ஓய்வு ஊதிய செலவை ரயில்வேதான் தொடர வேண்டும் என்கிறது. இது முரணான செயல்பாடு.மற்ற மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியத்திற்கு அரசு செலவிடுவது போல ரயில்வே ஊழியர்கள் ஓய்வுதியத்திற்கும் அரசே செலவிடவேண்டும். ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி ரயில்வேக்கு மிச்சமாவதோடு, ஒரு ரூபாய் வரவிற்கு செலவு 98 பைசா என்பது 70 பைசாவாக குறையும். ரயில்வே பெரும் லாபம் ஈட்டும். ரயில்வே மின்மயமாக்கப் படுவதால் எரிபொருள் செலவும் குறைந்து வருகிறது. எனவே பயணிகள் கட்டண உயர்விற்கு அவசியவில்லை என கூறினார்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா