புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் கட்டி 5 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு கிடைக்காமல் காத்து கிடக்கும் விவசாயிகள்

புதுக்கோட்டை, டிச.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் கட்டியும் கடந்த சில ஆண்டுகளாக விவசாய மின் இணைப்பு வழங்காததால் விவசாயிகள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். இதனால் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், கடலை, வாழை, கரும்பு, தென்னை, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தங்களின் வசதிக்கு ஏற்றவாறு பயிரிட்டு வருகின்றனர். விராலிமலை, அன்னவாசல், குன்னாண்டார்கோவில், கந்தர்வகோட்டை ஆகிய ஒன்றிய பகுதிகளில் அதிகமாக கிணற்று பாசனத்தையே நம்பி விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். திருவரங்குளம், அறந்தாங்கி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் போர்வெல்லை நம்பி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய பகுதிகளில் சிலர் காவிரியை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த பகுதி கடைமடை என்பதால் தண்ணீர் அரிதாக கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி நீடித்து வருவதால் ஏற்கனவே இருந்து போர்வெல் மற்றும் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் விவசாயிகள் மாற்று கிணறு வெட்டுதல் மற்றும் போர்வெல் அமைத்து வருகின்றனர். ஒரு கிணறு வெட்ட ரூ.7லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் செலவாகின்றது. இதற்கு அரசு வங்கிகள் மற்றும் தனியாரிடம் கடன் வாங்கித்தான் மேற்கொள்கின்றனர். இந்த பணிகள் முடிந்தவுடன் விவசாயிகள் மின் இணைப்பு பெற மின்வாரியத்தை அணுகுகின்றனர். முன்னுரிமை அடிப்படியில் ரூ. 50 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் பணம் கட்ட கூறுகின்றனர். இதன் அடிப்படையில் கடனோடு கடனாக இந்த பணத்தையும் மின்வாரிய அலுவலகத்தில் கட்டுகின்றனர். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் மின்வாரியத்தில் பணம் செலுத்தி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 5 ஆண்டுகளாக காத்துக்கிடக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி விவசாயம் செய்யவும் இல்லை. நிலைமை இப்படி இருக்கும் போது இவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கிகள் விவசாயிகள் நிலைமை தெரிந்து கொண்டு வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு கடன் ரூ. 5 லட்சம் என்றால் ஐந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் விவசாயிகள் கட்ட வேண்டிய தொகை ரூ.12 லட்சம் என்று கணக்கு காட்டுகின்றனர். இதனால் விவசாயிகள் என்ன செய்துவது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலில் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து விவசாயம் குறைந்து வருவதால் உணவு உற்பத்தியும் குறைந்து வருகின்றது. விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தும் அரசுக்கு வருவாய் குறைந்தும் வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தனபதி கூறியதாவது:
புதுக்கோட்டை விவசாயிகள் தொடர்ந்து வறட்சியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காததால் கடந்த 5 ஆண்டுகளாக கடும் மன உளைச்சலில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஒரு விவசாயி கினறு வெட்ட தொடங்கும்போது மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாது. கிணறு வெட்டிய பிறகு தான் விண்ணப்பிக்க முடியும். இப்படி விண்ணபித்து பல ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை என்றால் அவர்கள் வாங்கி கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவார்கள். இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நாங்கள் அரசிடம் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து பல ஆண்டுகள் கடந்து விட்டது.

இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம் மின் இணைப்பு வழங்க காலம் கடத்திவரும் அரசுதான். எங்களுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். முன்பெல்லாம் இலவசமாக மின் இணைப்பு வழங்குவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில் பணம் கட்ட சொல்கின்றனர். மின்வாரியம் கேட்ட பணத்தை செலுத்தியும், மின் இணைப்பு வழங்காமல் இருப்பது ஏற்புடையதில்லை. இதனால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Pudukkottai district ,
× RELATED பிதர்காடு பகுதியில் இரவு நேரத்தில் குறைந்தழுத்த மின் வினியோகம்