×

கவர்னரை சந்திக்க மக்களுக்கு அனுமதி மறுப்பு

பாகூர், டிச. 30: பாகூர் அருகே கவர்னரை சந்திக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதிகாரிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கவர்னர் மாளிகைக்கு புகார் அனுப்பி வருகின்றனர். அதனடிப்படையில் வார்ந்தோறும் கவர்னர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வுக்கு செல்கிறார். மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது வழக்கம். அதன்படி   பாகூரில் உள்ள சமுதாய நலக்கூடம் அடிப்படை வசதிகள் இன்றியும், முறையாக பராமரிக்கப்படுவதில்லையென கவர்னருக்கு புகார்கள் சென்றது.  

இதையடுத்து, கவர்னர் கிரண்பேடி நேற்று தனது 244வது ஆய்வு பணியாக பாகூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஆய்வு செய்தார். அப்போது சமுதாய நலக்கூடம்  உரிய முறையில் பராமரிக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், அதனை பராமரிக்கும் பொறுப்பினை, மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனே அதிகாரிகள் சமுதாய நலக்கூடத்தின் சாவியை மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைத்தனர். அப்போது, இலவச அரிசி, நூறு நாள் வேலைக்கு ஊதியம், பண்டிகை கால இலவச துணிகள் வழங்கப்படாமல் இருப்பது குறித்து கவர்னரிடம் புகார் தெரிவிக்க பொதுமக்கள் வந்தனர். ஆனால், அதிகாரிகளும், போலீசாரும், கவர்னரை சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்தினர். கவர்னர் ஆய்வு செய்து முடித்த பிறகு பேசுவார் என கூறி பொதுமக்களை காத்திருக்க வைத்தனர்.

ஆனால், கவர்னரோ ஆய்வு முடிந்தவுடன் பொதுமக்களை சந்திக்காமல் புறப்பட தயாரானார். இதனால் ஆத்திரமடைந்த  மக்கள் கவர்னரின் காரை வழி
மறித்து சந்திக்க முயற்சித்தனர். அப்போது, எஸ்பி பாஸ்கர், பொதுமக்களிடம் உங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி, கவர்னர் மாளிகையில் கொடுங்கள் என்று கூறினார். அதற்கு பொதுமக்கள், பல பேருக்கு எழுத படிக்க தெரியாது, கவர்னரிடம் நேரில் குறைகளை தெரிவிக்க வாய்ப்பு இருக்கும்போது நீங்கள் ஏன் எங்களை தடுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே கவர்னர் கிரண்பேடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் மீன் மார்க்கெட் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
அப்போது, சமுதாய நலக்கூடத்திற்கு வாகன நிறுத்தம் அமைப்பது, மீன் மார்க்கெட்டுக்கு வேறு இடத்தை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது பாகூரில் உள்ள நூலகத்துக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார்.

Tags : Governor ,
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...