×

ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது

திண்டிவனம், டிச. 30:  திண்டிவனத்தில் கோட்ட அளவிலான நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் அனு தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம் ஆகிய வட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்துகொண்டு காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு, மூன்று கடைகள் பார்ப்பதால் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே ரேஷன் கடை திறக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். இதனால் பொது மக்களுக்கு சேர வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. அப்படி திறக்கப்படும் நாளில் ஒரே நபர் 10க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்துக்கொண்டு மொத்தமாக வாங்கி செல்வதாகவும் குற்றம் சாட்டினர்.

 ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் பொழுது சோப்பு, உப்பு, பெருங்காயம், தீப்பெட்டி, டீ தூள்  உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் மட்டுமே அரிசி கொடுக்கப்படும் என ஒரு சில விற்பனையாளர்கள் தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினார். திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம் பேசுகையில், ரேஷன் கடைகளில் இருந்து  லாரிகளில் எடுத்து செல்லப்படும் அரிசிகள் திருடப்பட்டு வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்லபடுவதாகவும், அவற்றை தடுக்க நம்பகத்தன்மையுள்ள அதிகாரிகள் லாரியில் சென்று ரேஷன் கடைகளில் இறக்கிவிட வேண்டும் என்றார். மேலும்  ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைத்து மக்களும் ஏழ்மையானவர்கள், இவர்கள் இரண்டு மூன்று சிலிண்டர்களை வைத்து உணவு சமைப்பது கிடையாது. இன்னமும் ஏராளமான குடும்பங்கள் மண்ணெண்ணெய்யை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் அவர்களுக்கு கூடுதல் எண்ணை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குறைகளை கேட்டறிந்த சார் ஆட்சியர் அனு ரேஷன் கடைகளுக்கு செல்லும் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொதுமக்களுக்கு நிறைவாக சென்று சேர வழிவகை செய்யப்படும், என உறுதி அளித்தார். கூட்டத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபு வெங்கடேஸ்வரன், திண்டிவனம் வட்டாட்சியர் ராஜசேகர், செஞ்சி வட்டாட்சியர் கோவிந்தராஜ், மேல்மலையனூர் வட்டாட்சியர் செந்தில்குமார், மரக்காணம் வட்டாட்சியர் ஞானம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் கடவம்பாக்கம் மணி, நமச்சிவாயம், ராமன், ஜெயபால், அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு