×

வலங்கைமான் ஒன்றிய அலுவலகத்திலிருந்து 180 வாக்கு சாவடிகளுக்கு 72 பொருட்கள் அனுப்பி வைப்பு

வலங்கைமான், டிச.30: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (30ம் தேதி) நடைபெறும் ஊராக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 180 வாக்கு சாடிகளுக்கு வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட 72 பொருட்கள் நேற்று வாகனங்களில் போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 259 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 863 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 109 பேரும், மாவட்டகுழு உறுப்பினர் பதவிக்கு 9 பேர் உட்பட ஆயிரத்து 240 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கான பரிசீலனை முடிவுற்ற நிலையில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதில் இரண்டு வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதில் இரண்டு வேட்பு மனுக்களும், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் ஒரு வேட்புமனு உட்பட 5 மனுக்கள் நிராகரிக்கபட்டது நீங்கலாக ஆயிரத்து 235 மனுக்கள் ஏற்கபட்டது.

இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளில் 217 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். அதன் மூலம் இரண்டு ஊராட்சி தலைவர்கள் மற்றும் 78 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மொத்தம் உள்ள 408 பதவிகளில் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்ட 80 பதவிகள் நீங்கலாக உள்ள 328 பதவிகளுக்கு தற்போது ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். வேட்பாளர்கள் பிரசாரம் நேற்று முன்தினம் (28ம்தேதி) முடிவடைந்தது.

இப்பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்தெடுக்கும் விதமாக மொத்தம் 33,834 ஆண் வாக்காளர்களும், 33,433 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் இரண்டு பேரும் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் விதமாக 180 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 162 வாக்கு சாவடிகளுக்கு தலா எட்டு அலுவலர்களும், 16 வாக்கு சாவடிகளுக்கு தலா ஏழு அலுவலர்கள் என்ற விதத்தில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வலங்கைமான் ஒன்றியத்தில் ஆயிரத்து 536 அலுவலர்கள் ஊராக உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான பணி ஆணை நேற்று காலை வழங்கப்பட்டது. அதனையடுத்து தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேற்று முற்பகல் வாக்கு சாவடி மையத்திற்கு வந்தடைந்தனர்.

இவ்வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான வாக்கு சீட்டுகள், வாக்குபெட்டி, அடையாளமை உள்ளிட்ட 72 பொருட்கள் வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு சாவடி மையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியில் ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.முன்னதாக வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குசீட்டு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் நேரில் பார்வையிட்டார். அப்போது வட்டாட்சியர் தெய்வநாயகி உடனிருந்தார்.

Tags : office ,polling booths ,Walangaman Union ,
× RELATED மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு