×

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை எஸ்டிபிஐ கட்சி தொடர் போராட்டம் மாநில செயலாளர் அபுபக்கர் அறிவிப்பு

மன்னார்குடி, டிச.30: மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை எஸ்டிபிஐ கட்சி களத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடும் என கூத்தாநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் பேசினார்.
எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஜனவரி 4ம் தேதி திருவாரூரில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதனையொட்டி அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார். இதில் மாநில மகளிரணி பொதுச் செயலாளர் நசீமா பானு, மாவட்ட பொதுச் செயலாளர் விலாயத் உசேன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய அமைப்பின் மாவட்ட தலைவர் காஜா அலா வுதீன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தேசிய அளவில் எஸ்டிபிஐ கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிற சூழலில் வரும் 4 ம் தேதி திருவாரூரில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. எதிர்ப்பை சமாளிக்க சில திருத்தங்களை செய்ய முயற்சிக்காமல் மக்கள் விரோத சட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிட வேண்டும். நாட்டு மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு அதனை விடுத்து மக்கள் விரோத சட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்துவது ஏற்புடையதல்ல. உள்நோக்கம் கொண்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் நிராயுதபாணிகளாக போராடும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்துவது முறையல்ல. எனவே குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை எஸ்டிபிஐ கட்சி களத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடும். இவ்வாறு அபுபக்கர் சித்திக் பேசினார்.

Tags : Abubakar ,SDBI Party ,
× RELATED தமிழில் வெளியாகும் மலையாள படம் அஞ்சாம் வேதம்