×

நெல்லை-கடையம் இடையே சாலையோரம் ஆபத்தான கிணறு மூடப்படுமா?

பாப்பாக்குடி,டிச.30:   நெல்லை-கடையம் நெடுஞ்சாலையோரம் உள்ள ஆபத்தான திறந்த வெளி கிணறை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை-கடையம் நெடுஞ்சாலையில் பாப்பாக்குடி ஒன்றியம் கபாலிபாறை செங்குளம் இடையே சுடுகாட்டின் அருகே ரோட்டின் ஓரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. நெடுஞ்சாலையில் பாலத்தின் அருகிலும் வளைவு பகுதியிலும் ரோட்டில் இருந்து 2 அடி தூரத்தில் 30 அடி ஆழத்தில் இந்த கிணறு அமைந்துள்ளது. தற்போது பெய்த மழையால் கிணற்றில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. நெல்லை-கடையம் நெடுஞ்சாலையில் தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். பள்ளி வாகனம், கல்லூரி வாகனங்கள் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த கிணற்றை கடந்து செல்லும்போது பெரும் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் கால்நடைகள் ஆடு, மாடுகள் அவ்வப்போது இந்த கிணற்றில் விழுந்து பலியாவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் அருகே இருக்கும் வாய்க்காலில் நீர் ஓடுவதால் குளிப்பதற்காக பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் இவ்வழியே வந்து செல்கின்றனர். இதனால் உயிர் பலி எதுவும் நடப்பதற்கு முன்பு பாழடைந்த ஆபத்தான கிணற்றை முறையாக தூர்வாரி இரும்பு கதவு போட்டு மூட வேண்டும் என்றும், இல்லை எனில் நிரந்தரமாக மூட  வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,paddy-stall ,well ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...