×

மக்கள் பிரதிநிதிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் குமரி மகா சபா ஆண்டுவிழாவில் வசந்தகுமார் எம்.பி பேச்சு

நாகர்கோவில், டிச.30: குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும் என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார்.குமரி மகா சபா ஏழாம் ஆண்டுவிழா மற்றும் முதலாவது குளோபல் குமரியன்ஸ் மீட் ஆகியன நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. குமரி மகா சபா தலைவர் ராவின்சன் தலைமை வகித்தார். குளோபல் குமரியன்ஸ் மீட் செயலாளர் ஆஸ்டின் வரவேற்றார். கவுரவ தலைவர் டாக்டர் சொக்கலிங்கம், நிர்வாகிகள் கோலப்பன், சசிகுமார், ஜெயநேசகுமார், டாக்டர் சந்திரமோகன், தம்பிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜாண்சன் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாகிகள் சாம் ஹாரிசன், அலெக்சாண்டர், அருள்பிரதீஷ், பிரேம்குமார், டாக்டர் பாலன் சாம்சன், ஜீவநாயகம், பழனி, ராம், செல்வம், கேரள அரசின் ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் விஜயானந்த், வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் ஆஸ்டின் எம்.எல்.ஏ பேசுகையில், ‘குமரி மாவட்ட முன்னேற்றத்திற்கு டெல்லி வரை சென்று சபா நிர்வாகிகள் அமைச்சர், அதிகாரிகளை சந்திக்கின்றனர். 8ம் ஆண்டுவிழா நடத்தும்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறி நன்றி தெரிவிக்கும் விழாவாக நடத்த வேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்போம்’ என்றார். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ பேசுகையில், ‘குமரி மகாசபா விழாவில் கலந்துகொள்ள முக்கிய காரணம் குமரி மாவட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு சபா நிர்வாகிகள் முன்வந்து பணியாற்றி வருகின்றனர். அடுத்த தலைமுறையினருக்காகவும் பாடுபட்டு வருகின்றனர். நிர்வாகிகள் திறமைசாலிகள், அவர்களின் ஆலோசனைகளை பெற்று மாவட்ட வளர்ச்சிக்கு பாடுவோம். அவர்களின் முயற்சிகளுக்கும் துணை நிற்போம்’ என்றார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசுகையில், ‘குமரியில் சாலைகள் தொடர்ந்து மழை பெய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. குமரி மாவட்டத்திற்கு டென்டர் விதிகளில் விலக்கு அளிக்க வேண்டும். திட்டங்கள் கொண்டு வரும்போது இடங்கள் பற்றாக்குறை உள்ளது.

குமரி மாவட்டத்தில் அமைச்சர் அந்தஸ்து இருந்தால்தான் திட்டங்கள் கொண்டுவர முடியும்’ என்றார். வசந்தகுமார் எம்.பி பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பாடுபடவேண்டும். குமரி மாவட்ட வளர்ச்சிக்கு டெல்லியில் அனைத்து துறை அமைச்சர்களையும் சந்தித்து வருகிறேன். குமரி மாவட்டத்தில் விமானநிலையம் அமைக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் ஆய்வு அறிக்கைகொடுத்தால், கண்டிப்பாக விமான நிலையம் கொண்டுவரப்படும்’ என்றார். விழாவில் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து குமரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் மேற்பாட்டிற்கு அவர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடல் கூட்டமும் நடந்தது.

Tags : Politics Vasanthakumar ,Kumari Maha Sabha Anniversary ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு