×

நாகர்கோவில் வடசேரி பாரில் இருந்து பெட்டி பெட்டியாக 2600 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது


நாகர்கோவில், டிச.30: நாகர்கோவில் வடசேரியில் போலீசார் நடத்திய சோதனையில் மதுபான பாரில் இருந்து பெட்டி பெட்டியாக டாஸ்மாக் மதுபான வகைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதே போல் பார்களையும் மூட வேண்டும் என்று கலெக்டர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருந்தார். இருப்பினும் பலர் டாஸ்மாக் மதுபான வகைகளை முதல் நாளே வாங்கி பதுக்கி வைத்து கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.இந்தநிலையில் போலீசார் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களிலும் பெட்டி பெட்டியாக மதுபான வகைகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இந்தநிலையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் தலைமையில் போலீசார் நாடான்குளம்  பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மதுபான வகைகள் தாராளமாக இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. டாஸ்மாக் பாரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்து பெட்டி பெட்டியாக மதுபான வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பிராந்தி, ரம், பீர் போன்ற பாட்டில்கள் இருந்தன. மொத்தம் 2462 பாட்டில் பிராந்தி, ரம் போன்றவையும், 187 பாட்டில் பீர் வகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அருகே உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து இவை வாங்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அங்கிருந்த அய்யப்பன் மகன் சிவா(31) என்பவரை கைது செய்தனர். பார் லைசென்ஸ் எடுத்துள்ள பார்வதிபுரம் ஜஸ்டின் டேனியல் மகன் ஸ்பர்ஜன் என்பவரையும் தேடி வருகின்றனர்.டாஸ்மாக் கடையில் இருந்து சட்டவிரோதமாக பாருக்கு மதுபான வகைகள் சப்ளை செய்யப்பட்டதா? விடுமுறை நாளில் டாஸ்மாக் கடை திறந்து விநியோகம் செய்யப்பட்டதா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bar ,Vadassery ,Nagercoil ,
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்