×

கயத்தாறு அருகே குடிநீர், சாலை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு டிச. 30: கயத்தாறு அருகே குடிநீர், சாலை வசதிகளை முறையாக செய்துதரக்கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.  கயத்தாறு ஒன்றியம், அய்யனாரூத்து கிராமம் அம்மன்கோவில் வடகிழக்குத் தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் முறையாக குடிநீர் மற்றும் சாலை வசதி இன்றி மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் தினமும்  சுமார் அரை கி.மீ. தொலைவுள்ள பகுதிக்கு நடந்துசென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் தொடர்கிறது. மேலும் இத்தெருவில் சாலை வசதியின்றி மண்பாதையாக அதுவும் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருக்கிறது. கழிவுநீர் செல்ல வாறுகால் வசதியும் இல்லை என்பதால் மழைக்காலங்களில்  பெருக்கெடுக்கும் தண்ணீர், கழிவுகளோடு கலந்து தெருக்களில் நாட்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதில் உருவாகும் கொசுக்களால் சுகாதாசீர்கேடு நிலவுகிறது.

அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனும் இல்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் தேவர்குளம் கயத்தாறு சாலக்கு திரண்டுவந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த கயத்தாறு கிராம ஊராட்சிகளுக்கான பிடிஓ சசிகுமார், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார், சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளைப் பார்வையிட்ட பிடிஓ, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags : Village residents ,Kayathar ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...