×

உடுமலை,குடிமங்கலம்,மடத்துக்குளத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது

உடுமலை,டிச.29: திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் 2வது கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் உடுமலை ஒன்றியத்தில் 297 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 36 ஊராட்சி மன்றத் தலைவர்கள்,26 ஒன்றியக் கவுன்சிலர்கள்,2 மாவட்டக் கவுன்சிலர்களுக்கான போட்டியில் மொத்தம் 1,221  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.மேலும் இந்த பகுதி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 254  வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல குடிமங்கலம் ஒன்றியத்தில் 201  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,23  ஊராட்சி மன்றத் தலைவர்கள்,13 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்டக் கவுன்சிலர்களுக்கான போட்டியில் மொத்தம் 575 பேர் களத்தில் உள்ளனர். ஒன்றியத்தில் 126 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் வேட்பு மனுத்தாக்குதலுக்கு முன்பே ஒருசில வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். எனக்கு எந்த சின்னம் கிடைத்தாலும் அந்த சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று நூதன முறையை பிரசாரம் செய்தனர். கடந்த 19ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. வழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தலில் சமூகவலைத்தளங்களிலும் அதிக அளவில் பிரசாரம் நடைபெற்றது. வேட்பாளர்களின் புகைப்படங்கள், வீடியோக்களைத் தொகுத்து பின்னணியில் சிங்கமொன்று புறப்பட்டதே என்பது போன்று பில்டப் பாடல்களை மிக்ஸ் செய்து வலைத்தளங்களில் பரவ விட்டனர்.

மேலும் கிராமங்களின் சுவர்களை பலவிதமான சின்னங்கள் அலங்கரித்தன. பல இடங்களில் வேட்பாளர்கள் விதிகளை மீறி தங்கள் சின்னங்களை பரிசாக அளித்து வாக்கு சேகரித்தனர். காலை முதல் மாலை வரை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வாக்களியுங்கள் என்ற வாசகங்களை வாகனங்களில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் முழங்கின. இருள் சூழத் தொடங்கியதும் பிரியாணியும், குவாட்டருமாக பல கிராமங்கள் களை கட்டியது. இது தவிர ஓட்டுக்குப் பணம், கோயிலுக்குப் பணம் என பல வகைகளில் பணம் பாதாளம் வரை பாய்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஏராளமான தேர்தல் விதிமீறல்களோடு களைகட்டிய தேர்தல் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் 2வது கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் நேற்று மாலையுடன் அனல் பறக்கும் பிரசாரங்கள் நிறைவடைந்தன.

Tags : election campaign ,end ,Udumalai ,Madathukulam ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...