×

அத்ெலடிக் போட்டிகளில் அசத்தல் ஒலிம்பிக்கில் சாதிக்கத் துடிக்கும் கூடலூர் இரட்டை சகோதரிகள்

கூடலூர்,  டிச. 29: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மங்குழியில் வசிக்கும்  சபியா,  முஜிப் ரகுமான் ஆகியோரது மகள்கள் சம்னா சரீன், சப்னா சரீன் ஆகிய  இரட்டையர்கள் இருவரும் அத்ெலடிக் போட்டிகளில் மாவட்ட, மாநில, தேசிய அளவில்  கலந்துகொண்டு முதல் இடங்களை பெற்று தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர்.  ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு சாதிக்க துடிக்கும் இவர்களுக்கு  விளையாட்டுத் துறையில் பொருளாதார ரீதியாக அரசு உதவிகளை வழங்க வேண்டும்  என்று எதிர்பார்த்துள்ளனர்.
இவர்களது தாயார் சபியா கடந்த  1994ஆம் ஆண்டு பாலக்காட்டில் படிக்கும்போது  அத்ெலட்டிக் போட்டிகளில்  கலந்துகொண்டு பல்வேறு வெற்றிகளை குவித்தவர். குடும்ப சூழல் காரணமாக மாநிaல,  தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. இவர்களது தந்தையும்  கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். தற்போது தங்களது மகள்கள் இருவரும்  தேசிய அளவில் அத்ெலடிக் போட்டிகளில் சாதிப்பதற்கு இவர்களது உந்துதலே  காரணமாகியுள்ளது.
கூடலூர் பகுதியில் விளையாட்டை  ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், இருவரையும் ஈரோட்டில்  உள்ள அரசு விளையாட்டு விடுதியில் தங்க வைத்து போட்டிகளில் ஈடுபட  வைத்துள்ளனர். ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்  இந்த இரட்டை மாணவிகளில் சப்னா சரீன் 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டப்  போட்டிகளில் நீலகிரி, கோவை, சென்னை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு முதல் இடங்களை  பிடித்துள்ளார்.

இதேபோல் தேசிய அளவில் டெல்லி, சத்தீஸ்கர், மும்பை, பஞ்சாப்  உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு முதல் இடங்களை  பெற்றதோடு  டெல்லியில் நடைபெற்ற போட்டியில்  தங்கப் பதக்கமும்  வென்றுள்ளார். அடுத்ததாக ஒரிசாவில் நடைபெற உள்ள   தேசிய அளவிலான பள்ளி  மாணவர்களுக்கு இடையேயான கேளோ இந்தியா போட்டிகளில் கலந்து கொள்ளவும் தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.
 இதேபோல், சம்னா சரீன் நீளம் தாண்டுதல்,  தடை தாண்டுதல் 1000 மீட்டர் ஆகிய போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு  இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். தேசிய  அளவில் மும்பை, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் விளையாடி  தடை தாண்டுதல்  போட்டியில் மும்பையில்  மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். தேசிய அளவிலான  போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சாதிப்பதற்கு  தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பதாகவும், சர்வதேச அளவில் ஒலிம்பிக்  போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை நிகழ்த்துவதே தங்களது லட்சியம் என இந்த  இரட்டை அத்லெடிக் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
 ஆனால், தேசிய  மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தங்களது தாய்  தந்தையரின் பொருளாதாரம் தாக்குப் பிடிக்காத காரணத்தால் அவர்கள் பல்வேறு  இடங்களில் கடன் வாங்கியும், சிலரின் உதவிகள் பெற்றும் வருகின்றனர்.

 மாவட்ட  நிர்வாகமும் தமிழக அரசின் விளையாட்டு துறையும் தங்களை அடையாளம் கண்டு  விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை  வாங்குவதற்கும், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செலவுகளை ஈடுகட்ட உரிய  உதவிகளை செய்து தங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூடலூர் பகுதிகளில்  எங்களைப் போன்ற  விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு  போதிய வசதிகளுடன்  கூடிய விளையாட்டு மைதானங்களை அமைத்துத்தர வேண்டும் என்றும் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cuddalore Twin Sisters Athletic Championships ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்