×

மசினகுடி, முதுமலையை முற்றுகையிடும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி, டிச. 29:சுற்றுலா பயணிகள் பலர் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கின்றனர். சிலர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மாற்றுப்பாதையில் செல்ல முற்படுவதால் கல்லட்டி மலைப்பாதையில் பாதுகாப்பு அதிகரிப்பது அவசியம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் குறுகிய அதே சமயம் அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலைகளாக உள்ளன. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டத் தெரியாமல் சில சமயங்களில் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக, ஊட்டியில் இருந்து முதுமலை, மைசூருக்கு கல்லட்டி, மசினகுடி மலைப் பாதையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகிறது. இச்சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தினாலும் அதனை கண்டு கொள்ளாமல் இந்த மலைப் பாதையில் அடிக்கடி சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
 இச்சாலையில், சுற்றுலா வேன்கள், மினி பஸ்கள் போன்றவைகளை இப்பாதையில் இயக்க தடை விதித்த போதிலும் முறைகேடாக சென்று விபத்தில் சிக்கி வந்தனர்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஒரு விபத்தில் 5 பேர் பலியாயினர். அன்றைய தினம் முதல், இச்சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.  கர்நாடக மாநிலம் செல்லும் சுற்றுலா பயணிகளில் சிலர், ஆடாசோலை, குளிச்சோலை வழியாக தலைகுந்தாவை அடைந்து அங்கிருந்து இப்பாதையில் செல்கின்றனர்.  கல்லட்டியில் உள்ள சோதனை சாவடியில் உள்ள அதிகாரிகளிடம் போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளோம் என தெரிவிப்பதால், அவர்களும் எதார்த்தமாக விட்டு விடுகின்றனர். புத்தாண்டு விடுமுறையை கொண்டாட அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைபாதை வழியாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள ரிசார்ட்டுக்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இச்சாலையில் விபத்துக்களை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்துவது அவசியம்.

Tags : Mudumalai ,
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்