×

கர்டர் அமைக்கும் பணி ரயில்கள் இயக்கம் ரத்து

கோவை, டிச.29: கோவை அவினாசி ரோடு சுரங்கப்பாதையில் ரயில்வே கர்டர் அமைக்கும் பணியால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதையில் தலா 45 டன் எடையிலான, இரண்டு இரும்பு ரயில் கர்டர்கள் மூலமாக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. 25 மீட்டர் நீளத்திற்கு 2003ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த ரயில்வே கர்டர் துருப்பிடித்து பழுதடைந்து விட்டது. ரயில்கள் செல்லும்போது அதிர்வு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணி முதல் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு, சிக்னல் ஒயர் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 75 டன் எடை தூக்கும் கிரேன் மற்றும் 100 டன் எடை தூக்கும் கிரேன் மூலமாக இரும்பு கர்டர் இணைப்பு துண்டித்து அகற்றப்பட்டது. பழைய இரும்பு கர்டர்களுக்கு மாற்றாக துருப்பிடிக்காத வகையில் அலுமினிய கோட்டிங் செய்யப்பட்ட, ஸ்டீல் கர்டர் பொருத்தப்பட்டது. கர்டர் அமைக்கும் பணியில் 65 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். துரிதமான பணியால் தண்டவாள கர்டர்கள் அகற்றப்பட்டு விரைவாக பொருத்தப்பட்டது. துணை டிவிசன் மேலாளர் ரத்தின காமராஜ் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 தண்ட வாள கர்டர் பணிகாரணமாக கோவை மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு பாலக்காடு பாசஞ்சர் ரயில் இருகூர், போத்தனூர் ரயில் பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. எக்மோர் மங்களூர் ரயில், தான் பாத் ஆழப்புழா ரயில், பாட்னா எர்ணாகுளம் ரயில், பெங்களூர் எர்ணாகுளம் ரயில், மங்களூர் எக்மோர் ரயில் கோவை ரயில் நிலையம் வருவது ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில்கள் இருகூர், போத்தனூர் ரயில் நிலையம் வழியாக இயங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில், கோவை சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் வடகோவை ரயில் நிலையம் வழியாக இயங்கியது. கண்ணனூர்-கோவை பயணிகள் ரயில் போத்தனூர் ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. இன்று மாலை வரை ரயில் இயக்கம் ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கால அவகாசத்திற்கு முன்பாக பணிகள் விரைவாக முடிந்தால் கோவை ரயில் நிலையம் வழியாக ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தண்டவாள கர்டர் சீரமைப்பு பணி காரணமாக கோவை ரயில் நிலையம் ரயில்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. வடகோவை, போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குவிந்தது. அனைத்து ரயில்களும் சிக்னல்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து இயக்கப்பட்டது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்