×

கோவில்பட்டி, ஏரல், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், எட்டயபுரத்தில் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை

கோவில்பட்டி, டிச. 29:  கோவில்பட்டி, ஏரல், ஆறுமுகநேரி உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை மற்றும் ஐயப்ப பவனி விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
 கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கடந்த 25ம் தேதி இரவு 7.30 மணிக்கு கன்னி பக்தர்களின் கூட்டு வழிபாடு, 26ம் தேதி இரவு 7 மணிக்கு சுத்தி பூஜை, நேற்று முன்தினம் (27ம் தேதி) மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் புறப்பட்ட தீர்த்த கலச ரத ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. மாலை 6 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஆலயத்தில் உள்ள 18 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி மஹா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு பக்தி பாடகர் வீரமணிதாசனின் பக்தி இன்னிசை நடந்தது. விழாவில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள், ஐயப்ப பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தரிசித்தனர்.
 ஏற்பாடுகளை ஆலயத் தலைவர் சிங்கம் மாடசாமி மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
ஏரல்:  இதே போல் ஏரலில் மணிகண்டன் யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பவனி நடந்தது.
 ஏரலில் ஆண்டுதோறும் மணிகண்டன் யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பவனி நடந்து வருகிறது.  இதன்படி சிவன் கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு 36வது ஆண்டாக மண்டல பூஜை மற்றும் ஐயப்ப பவனி விமரிசையாக நடந்தது.  இதை முன்னிட்டு காலை கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்துவருதலும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை, கூட்டு வழிபாடும் நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, சிறப்பு தீபாராதனை, அன்னதானம்   நடந்தது. மாலை அலங்கார பொன் சப்பரத்தில் ஐயப்பன் எழுந்தருளி ஏரலில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சிகளில் ஐயப்ப பக்தர்கள், ஊர் மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
 ஏற்பாடுகளை மணிகண்டன் யாத்திரை குழு குருசாமிகள் ராம்தாஸ், மாரிமுத்து தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
 ஆறுமுகநேரி: ஆத்தூர் பழையக்கிராமம் புஷ்கலா தேவி சமேத தர்மசாஸ்தா கோயிலில் மண்டல பூஜை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை கும்ப ஜெபமும், தொடர்ந்து ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதர் கோயிலில் ஊர்வலமாக பால்குடம் கொண்டுவரப்பட்டதும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.
 மாலை 6 மணிக்கு பஜனை, சஹஸ்ரநாம அர்ச்சனை, இரவு 8.30 மணிக்கு மஹா நைவேத்தியத்துடன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஆத்தூர் பிராமண சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் காவடி பிறை  முருகன் கோயிலில் மண்டல பூஜை  நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புனிதநீர்  எடுத்துவரப்பட்டு காலை 8மணிக்கு கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பரிவார  மூர்த்திகளுக்கு 108 வகையான அபிஷேகம் நடந்தது.
 தொடர்ந்து காவடிபிறை  முருகன் ஐயப்ப பக்தர்கள் குழுவினர் பாடல்கள் பாடி வழிபட்டனர்.  12 மணிக்கு காவடிபிறை முருகன், தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு அலங்கார பூஜை,  தீபாராதனை நடந்தது. மதியம் 1மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை நடந்தது.  இதில் திரளானோர் பங்கேற்றனர்.
 ஏற்பாடுகளை காவடி பிறை முருகன் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
எட்டயபுரம்:  இதே போல் எட்டயபுரத்தில் நடந்த புஷ்பாஞ்சலி ஊர்வலத்தில் ஐயப்ப பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
 எட்டயபுரம்  ஜோதி ஐயப்பன் கோயிலில் ஜோதி ஐயப்ப பக்தர்கள் சார்பில் அகண்டநாம பூஜை,  மண்டலபூஜை மற்றும் கூட்டுகன்னிபூஜை என முப்பெரும் விழா நடந்தது. கடந்த 26ம்  தேதி துவங்கிய இவ்விழாவையொட்டி பக்தர்கள் சரணகோஷம் பாடி ஐயப்பனை  வழிபட்டனர்.
நேற்று முன்தினம் உலக நன்மை வேண்டி  மேளதாளம்,  வாணவேடிக்கையுடன் புஷ்பாஞ்சலி ஊர்வலம் நடந்தது. ஐயப்பன் கோயிலில் துவங்கிய  இந்த ஊர்வலம் நடுவிற்பட்டி, மேலவாசல் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக  ஐயப்பன் கோயிலை மீண்டும் வந்தடைந்தது. இதையடுத்து கன்னிசாமிகளுக்கு  கூட்டுகன்னி பூஜை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை  குருசாமி சங்கரன் மற்றும் ஜோதி ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Devotees ,Kovilpatti ,Arumuganeri ,Aral ,Sathankulam ,Ettayapuram ,
× RELATED கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்...