×

நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் 4வழிசாலையின் நடுவில் வைத்த பேரல்களால் விபத்து அபாயம்: அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

நாங்குநேரி, டிச.29:  நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் வைக்கப்பட்ட பேரல்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை அகற்ற வாகனஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடந்து செல்வதற்கான இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. அதன்வழியே வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கடந்த சிலநாட்களாக அதன்குறுக்கே பேரல்களை வைத்து போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி வாகனங்கள் செல்லும் பகுதியில் எதற்காக பேரல்கள் வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

ஒழுங்கற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரல்கள் சாலையில் உருண்டு கிடக்கின்றன. இதனால் சாலையை கடக்கும் வாகனங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இருபுறங்களிலும் வரும் வாகனங்களை கவனித்து சாலையை கடக்கும் வாகனஓட்டிகள் மர்மநபர்கள் வைத்த பேரல்களால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அங்கு சாலை பணிகள் அல்லது வேறு எந்த பணிகளும் நடக்காத நிலையில் எவ்வித அறிவிப்புமின்றி சாலையின் குறுக்கே பேரல்களை வைத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில் நாங்குநேரி அருகே வைக்கப்பட்ட பேரல்களும் அதற்காக இருக்குமோ வாகனஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே காவல்துறை விசாரணை நடத்தி எவ்வித அனுமதியுமின்றி போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் தடை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சாலையின் நடுவே வைத்துள்ள பேரல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : accident ,lane road ,motorists ,Marukkalurichi ,Nankuneri ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!