×

4 வாக்குகள் பதிவு செய்ய திணறிய வாக்காளர்கள்

சிவகங்கை, டிச. 29: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் நான்கு வாக்குகளை பதிவு செய்ய வேண்டியிருப்பதால் வாக்காளர்கள் திணறி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் டிச.27ல் ஐந்து ஒன்றியங்களுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏழு ஒன்றியங்களில் நடக்க உள்ளது. 12 ஊராட்சி ஒன்றியங்கள், 445 ஊராட்சிகளில் உள்ள 3 ஆயிரத்து 748 பதவிகளுக்கு இத் தேர்தல் நடக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே நடக்கும் இத்தேர்தலில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகள் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு வாக்காளருக்கும் நான்கு வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அதில் மஞ்சள் கலர் வாக்குச்சீட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும், பச்சைக்கலர் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினருக்கும், பிங்க் கலர் ஊராட்சி மன்றத்தலைவருக்கும், வெள்ளை மற்றும் ஊதாக்கலர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும் என நான்கு வகை வாக்குச்சீட்டுகள் வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் முதியோர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நான்கு வாக்குச் சீட்டுகளில் சின்னங்களை அறிந்து முத்திரையிடுவது, மடிப்பது உள்ளிட்டவைகளால் திணறி வருகின்றனர். நான்கு வாக்குச் சீட்டுகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் வாக்குச் சீட்டுகளை தவிர மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள் குறித்து பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. இதனால் ஏராளமான வாக்காளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் முத்திரையிட சொல்வது, மடிக்கச் சொல்வது என கூறுகின்றனர். இதனால் தேவையற்ற பிரச்னைகள் வரும் என்பதால் ஏஜெண்டுகள் ஒத்துக்கொண்டால் மட்டுமே அப்பணிகளை செய்தனர். அலுவலர்கள் கூறியதாவது: எதற்கு இத்தனை வாக்குச்சீட்டு தருகிறீர்கள் என ஏராளமான வாக்காளர்கள் கேள்வி எழுப்பினர். வாக்குச்சீட்டு அடிப்படையிலான தேர்தல் கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தற்போதுதான் நடைபெறுவதால் முத்திரை பதித்து சீட்டை மடிப்பதில் குழப்பம் ஏற்பட்டது’ என்றனர்.

Tags : Voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...