×

வாக்குப்பெட்டி எடுக்க தாமதமானதால் காலை வரை காத்திருந்த ஆசிரியர்கள்

சிவகங்கை, டிச. 29: வாக்குப்பெட்டி எடுக்க தாமதமானதால் நேற்று காலை வரை வாக்குச்சாவடியிலேயே பெண் ஆசிரியர்கள், அலுவலர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஐந்து ஒன்றியங்களில் முதற் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலைகளிலும் பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்றினர். இவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் பெண் ஆசிரியர்களாவர். கடந்த 26ம் தேதி காலை மூன்றாம் கட்ட பயிற்சி நடந்த அன்று பயிற்சி நடந்த இடத்தில் இருந்து அவரவருக்கு பணி ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றனர். பின்னர் 27ம் தேதி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப்பெட்டிகளை சீல் வைப்பது, ஆவணங்களை தயார் செய்வது உள்ளிட் பணிகளை முடித்து காத்திருந்தனர். ஆனால் வாக்குப்பெட்டிகளை எடுக்க வாகனங்கள் வர தாமதமானது. நேற்று அதிகாலை 3 மணி வரை வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகளை வாகனங்களில் ஏற்றும் பணி நடந்தது. அதன் பிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து அவரவர் ஊர்களுக்கு செல்வதில் வாகனங்கள் இல்லாமல் சிரமம் ஏற்பட்டதால் ஏராளமான ஆசிரியர், அலுவலர்கள் மீண்டும் நேற்று காலை வரை வாக்குச்சாவடிகளிலேயே தங்கினர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் தூக்கமின்றி பணியாற்ற வேண்டிய நிலை, காட்டுப்பகுதிக்குள் இருந்த பெரும்பாலான வாக்குச்சாவடிகள் என பெண் ஆசிரியர்கள், பெண் அலுவலர்கள் கடும் அவதியடைந்தனர். தேர்தல் காலங்களில் இதுபோன்ற நிலையை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மொத்தம் ஒரு வாக்குச்சாவடியில் 10 பேர் பணியாற்றினால் அதில் எட்டு அல்லது ஒன்பது பேர் பெண்களாவர். இதில் பெண் ஆசிரியைகளே அதிகம். வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்ல ஒவ்வொரு தேர்தலிலும் தாமதம் செய்கின்றனர். கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் ஒரு லாரியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று வாக்குப்பெட்டி ஏற்ற ஓர் இரவு முழுவதும் ஆகிறது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் வாக்குச்சாவடியிலேயே பெண்கள் தங்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். தேர்தல் பணியில் இருந்து பெண் ஆசிரியை, பெண் அலுவலர்களை விடுவிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்