×

திருச்சி உள்பட 100 இடங்களில் கைவரிசை பைக்கில் வந்து செயின் பறிக்கும் கொள்ளையன் சிக்கினான்

திருச்சி, டிச. 29:  திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நாகையா. போலீஸ் ஏட்டு. ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பரிமளா(45). இவர் மகள்களுடன் திருச்சியில் வசித்து வருகிறார். கடந்த 26ம் தேதி காலை மகள்களை அழைத்துக்கொண்டு அண்ணா ஸ்டேடியத்திற்கு பரிமளா நடந்து சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த வாலிபர் பரிமளா கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்து சென்றார்.அன்று மாலையில் மீண்டும் அதே சாலையில் தனலட்சுமி (72) என்பவரிடம் இருந்து 10 பவுன் செயின் பறிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தனிப்படை போலீசார் விரட்டி சென்று பைக்கில் மோதி, வாலிபர் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் அவர் கேரளாவை சேர்ந்த முகமது முஸ்தபா (30), செயின் பறிப்பு கொள்ளையன் என தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்கள் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முகமது முஸ்தபா செயின் பறிப்பு கொள்ளையில் கில்லாடி. தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை பெண்களிடம் 700 பவுன் செயின்களை பறித்துள்ளார். கேரளாவை சேர்ந்த அவர் அங்கிருந்து காரில் தமிழகம் வந்து நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். பின்னர் அங்கிருந்து பைக்கில் திருச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பில் கைவரிசையை காட்டி வந்துள்ளார். திருச்சி போலீஸ் ஏட்டு நாகையா மனைவி பரிமளாவிடமும் செயின் பறித்தது இவர் தான் என ெதரியவந்தது என்றனர். தொடர்ந்து முகமதுமுஸ்தபா வேறு எந்தந்த மாவட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இதுவரை எத்தனை பெண்களிடம் எவ்வளவு நகைகள் பறித்துள்ளார். இவர் மட்டும் இந்த செயலில் ஈடுபட்டுவருகிறார்? அல்லது கேரளாவிலிருந்து கும்பலாக வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுவருகிறார்களா, இதுவரை பறித்த நகைகளை எங்கு வைத்துள்ளார் என துணை கமிஷனர் வேத ரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Chain burglars ,places ,Trichy ,
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி