×

பொழுதுபோக்கிற்கான இடம் ஏதுமில்லாததால் புதுகையில் அரையாண்டு விடுமுறையை போக்குவதில் பள்ளி மாணவர்கள் அவதி

புதுக்கோட்டை, டிச.29: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு பொழுது போக்குவதற்கென்று பூங்கா, சினிமா தியேட்டர் என எதுவுமே கிடையாது. மேலும், பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரிவர பராமரிக்காததால், பூங்கா முழுவதும் குப்பை கூலமாக அலங்கோலமாய் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை, மாலை நேரங்களில் இந்த பூங்காவிற்கு வந்து விளையாடியும், ஓய்வெடுத்தும், நடைபயிற்சியும் மேற்கொண்டு வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களும், ஓய்வெடுப்பதற்காக உள்ள இருக்கைகளும் பழுதடைந்து போனது. மேலும் இங்கு அழகுக்காக அமைக்கப்பட்டுள்ள சிலைகள் உடைந்தும் காணப்படுகிறது. மேலும், இந்த பூங்காவில் குடிநீர் வசதியும் இல்லாத நிலை உள்ளது. பூங்காவில் எங்கு பார்த்தாலும்குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. மேலும், இந்த குப்பைக் கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

விளையாட்டு உபகரணங்களும், இருக்கைகளும் பழுதடைந்து போனதால் இந்த பூங்காவிற்கு வருகை தரும்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்தவிர்த்து விட்ட நிலையில், பூங்கா முறையான பராமரிப்புஇல்லாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால், பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வேறு வழியில்லாமல் மணிப்பள்ளம் சாலை, ஆதனக்கோட்டை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், சிறியவர்கள் பொழுதுபோக்கிற்காக எந்த விதமான வசதியும் இல்லாததால், பள்ளியின் வளாகத்தில் உள்ள இடங்களில் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பகல் நேரத்தில் சிறுவர்கள் பொழுதுபோக்க இடம் இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு சென்று பள்ளி மைதானத்தில் விளையாடுகின்றனர். இது அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமில்லாமல் உள்ளது. இதனால் ஆலங்குடி நகராட்சி பகுதியில் பூங்காக்ககளை சரிசெய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் பொதுமக்களின் பொழுபோக்குக்கென்று எந்த ஒரு இடமோ, திரையரங்கோ கிடையாது. அதனால் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் பூங்காவையே நாட வேண்டியுள்ள நிலையில், ஆலங்குடியில் உள்ள ஒரேஒரு பூங்காவும், தற்பொழுது பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கோ, பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கோ எந்தவொரு இடமும் பேரூராட்சியில் இல்லாமல் போய்விட்டது. எனவே பூங்காவை முறையாக பராமரித்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் பொழுதுபோக்கும் வகையில் மாற்றித்தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அரையாண்டு விடுமுறையை பள்ளி மாணவர்கள் விரும்பம்போல் போக்க தகுந்த ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : schoolchildren ,holiday ,Pudukkottai ,
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு