×

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பணி அங்கன்வாடி பணியாளர் 150 பேருக்கு தபால் வாக்கு மறுப்பு: மறியல் முயற்சி கைது மிரட்டல் விடுத்த போலீசாருக்கு கண்டனம்

கரூர், டிச. 29: தேர்தல் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள் 150 பேருக்கு தபால் வாக்கு மறுக்கப்பட்டதால் சாலை மறியல் செய்ய முயன்றனர். கைது மிரட்டல் விடுத்த போலீசாரின் போக்குக்கு கண்டனம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக இந்த ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 150 பேரை தேர்வு செய்து உள்ளாட்சி நிர்வாகம் அனுப்பியது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய இவர்களுக்கு தபால் ஓட்டு தருவதாக கூறி பணிக்கு அனுப்பினர். நேற்று ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து கேட்டபோது கிடையாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் ஊழியர்கள் கோபம் அடைந்தனர். இவர்கள் தாந்தோணிமலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

அங்கு வந்த தாந்தோணிமலை போலீசார் போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். பின்னர் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி பேச்சு நடத்தியதை தொடர்ந்து படிவம் வழங்கப்பட்டது. தபால் வாக்கு போட ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதிகூறினர். இதுகுறித்து அங்கன்வாடி பபணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியம் மாநில இணை செயலாளர் ஜெயந்தி கூறுகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தியதைப்போல எங்களுக்கு வகுப்பு நடத்தவில்லை. முன்னதாக தபால் வாக்கும் தரவில்லை.150 பேருக்கு பணி ஒதுக்கி பல்வேறு வாக்குசாவடிகளில் நாங்கள் வாக்களித்தவர்களுக்கு விரலில் மை வைப்பது, வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பது போன்ற பணிகளை செய்தோம். தேர்தல் முடிந்து வந்தால் தபால் வாக்கு கிடையாது என்கின்றனர். நாங்கள் எங்கள் வாக்குகளை செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டனர். ஜனநாயக கடமையாற்றிய எங்களுக்கு ஜனநாயக முறைப்படி ஓட்டுப்போட ஏற்பாடு செய்யவில்லை. போலீசார் கைது செய்வோம் என்கின்றனர். நாங்கள் என்ன தவறு செய்தோம். ஓட்டுரிமை கேட்டது தவறா என்றார்.

Tags : voter ,Anganwadi ,district ,Karur ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்