களத்தில் 330 வேட்பாளர்கள் கடவூர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேச்சு நன்றி கெட்ட அதிமுகவினருக்கு டெபாசிட் கூட கிடைக்க கூடாது

கரூர், டிச. 29: உள்ளாட்சி தேர்தலில் நன்றி கெட்ட அதிமுகவினருக்கு டெபாசிட் கூட கிடைக்க கூடாது என்று கடவூர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேசினார். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் காணியாளம்பட்டியில் நேற்று இறுதிக்கட்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேசியது:

1987க்கு முன் இந்திய மண்ணில் பிறக்காதவனுக்கு இந்திய குடியுரிமை இல்லை என்றால் அத்வானிக்கு குடியுரிமை ரத்தாகுமா? அத்வானி பிறந்த ஊர் பாகிஸ்தானில் உள்ளது. ஒருவேளை அத்வானி ஊர் பிரிந்து சென்ற பாகிஸ்தான் தானே என்றால் யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழன் லெமூரியா கண்டத்தில் பிறந்தவன் தானே. 1980ல் உலக தமிழ் மாநாடு செய்திப்பிரிவு சிறப்பு படம் அதைத் தானே வலியுறுத்தியது. அத்வானியை அனுமதிக்கும்போது ஈழத்தமிழனை அனுமதித்தால் என்ன? முதலமைச்சரும், அதிமுகவினரும் ஈழத் தமிழனுக்கு இங்கே எந்த குறையும் இல்லை என்கின்றனரே. ஈழத்தமிழன் இந்தியாவில் படிக்க முடியுமா? வாக்கு போட முடியுமா? ரேஷன் கார்டு பெற முடியுமா?

ஈழத்தமிழனுக்கு இரட்டை குடியுரிமை கேட்டு இருக்கிறோம் என்கிறீர்களே. நீட்டுக்கு எழுதிய கடிதம் என்ன ஆனது? 7 பேர் விடுதலைக்கு எழுதிய கடிதம் என்ன ஆனது? இன்று தன்னை உருவாக்கிய சசிகலாவின் கணவர் மறைவுக்கு போகாமல் துரோகம் செய்தவர் ஈபிஎஸ் என்றால், அன்று தன்னை உருவாக்கிய ஆர்எம்வீக்கு நன்றி காட்டாமல் வாழ்ந்து வருபவர் தான் தம்பித்துரை. பொதுவாகவே அதிமுக என்பது நன்றி மறந்த கூட்டமாக திகழ்கிறது. அதனால் தான் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தலைமை கழகத்திற்கு இடம் தந்த ஜானகி அம்மையார் படமோ, எம்ஜிஆர் படமோ இன்றி ஜெயலலிதா படமும், பழனிச்சாமி, பன்னீர்செல்வம் படம் மட்டும் இருக்கிறது. இந்த நன்றி கெட்டவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்க கூடாது. தோல்வி தொடர வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, எம்எல்ஏ ராமர், கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ காமராஜ், கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மனோகரன், எம்.எஸ்.மணியன், மாணிக்கம் மற்றும் வேட்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>