×

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருக்கோவிலூர், டிச. 29: திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசல் வீதியில் வரதராஜன் மகன் நித்தியானந்தம் (69) என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 7 வருடமாக பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கை அணைத்து, பின்னர் ஏடிஎம் மையத்தின் உள்ளே நுழைந்து கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்பிரே அடித்துள்ளனர். தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்ததில், இயந்திரம் பாதியளவு உடைந்த நிலையில் பணம் இருந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு தப்பி  சென்றுள்ளனர். முன்னதாக மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்க ஏடிஎம் மையத்தின் உள்ளேயும், வெளியேயும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீசார் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.

இதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்தினம் இரவும் திருக்கோவிலூர் அருகே செட்டிதாங்கல் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரத்தின் லாக்கை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இயந்திரத்தின் மேல்பாகம் உடைக்கப்பட்ட நிலையில் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டி உறுதியாக இருந்ததால் அதை உடைக்க முடியாமல் தப்பி ெசன்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை பணம் எடுக்க வந்தவர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.திருக்கோவிலூர் பகுதியில் அடுத்தடுத்த இரவில் 2 ஏடிஎம் மையத்தின் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...