×

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 1162 பதவிகளுக்கு 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்

நாமக்கல், டிச.29: நாமக்கல் மாவட்டத்தில் 1162 பதவிக்கு நாளை 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் 7 ஒன்றியங்களில் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில், 79 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு, அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் கட்டமாக நாளை (30ம்தேதி) நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், பரமத்தி, எலச்சிபாளையம், புதுச்சத்திரம் ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 8 மாவட்ட கவுன்சிலர், 86 ஒன்றியக்குழு உறுப்பினர், 150 ஊராட்சி மன்ற தலைவர், 918 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் என மொத்தம் 1162 பதவிகளுக்கு, நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 3,579 பேர் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் நேற்று மும்முரமாக நடைபெற்றது. வாக்காளர் பட்டியலுடன் சேர்க்க வேண்டிய, துணை வாக்காளர் பட்டியல் நேற்று இணைக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் தனியாக பிரித்துவைக்கப்பட்டது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் மெகராஜ் பல்வேறு ஒன்றியங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் இன்று காலை முதல் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. 7 ஆயிரம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்கிறார்கள். 7 ஒன்றியங்களிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. கடந்த ஒரு வாரமாக அரசியல் கட்சியினர் மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்தனர்.

நாளை 2ம் கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி, மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் நேற்று மாலை 5 மணியுடன் மூடப்பட்டது. ஆனால் மதுபான பார்கள், சந்துகடைகளில் வழக்கம் போல அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. அரசியல் கட்சியினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பணம் படைத்த வேட்பாளர்கள் பெட்டி, பெட்டியாக மதுபானங்களை வாங்கி குவித்து வைத்துள்ளனர்.

Tags : Elections ,Namakkal district ,
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...