×

விசைப்படகில் இருந்து தவறி விழுந்தாரா? ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது தூத்தூர் மீனவர் மாயம் குளச்சல் மரைன் போலீசார் விசாரணை

நாகர்கோவில், டிச.29: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்டோபர் 22ம் தேதி இரவு 10 மணிக்கு தூத்தூரை சேர்ந்த ரதி என்பவருக்கு சொந்தமான ‘மிஸ்டிகல் ரோஸ்-2’ என்ற விசைப்படகில் ரதி(39) மற்றும் மீனவர்கள் 12 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தூத்தூரில் இருந்து சுமார் 600 நாட்டிக்கல் மைல் தொலைவில் டிசம்பர் 3ம் தேதி காலை 8 மணியளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. தொடர்ந்து காற்று வீசிக்கொண்டிருந்ததால் அவர்களால் மீன்பிடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதனால் விசைப்படகை நிறுத்திவிட்டு சுமார் 10.30 மணியளவில் அனைவரும் விசைப்படகில் உள்ளே சென்று தூங்கியுள்ளனர். டிசம்பர் 4ம் தேதி காலை 5 மணியளவில் டீ குடிக்க சக மீனவர் எழுந்து பார்த்தபோது தூத்தூர் புனித ஆகத்தம்மாள் தெருவை சேர்ந்த தொபியாஸ் மகன் மோயிஸ்(48) என்பவரை மட்டும் காணவில்லை. கடலில் பல இடங்களில் தேடி பார்த்தும் அருகில் நின்ற விசைப்படகுகளில் ஒயர்லஸ் மூலம் தகவல் தெரிவித்து தேடி பார்த்தும் இதுவரை மோயிசை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். இது தொடர்பாக ரதி, குளச்சல் மரைன் காவல் நிலையத்தில் டிசம்பர் 27ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக குளச்சல் மரைன் போலீசார் மீனவர் மாயமானதாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mayam Kolachal Marine ,sea ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!