×

மாநகராட்சியுடன் இணைத்து 10 ஆண்டாகியும் மழைநீர் கால்வாய் வசதி கூட செய்து தரவில்லை: பெருங்குடி மக்கள் புலம்பல்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், 184வது வார்டுக்கு உட்பட்ட பெருங்குடியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஏராளமான ெதாழில் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினசரி இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதி பேரூராட்சியாக இருந்தபோது, கடந்த 15 வருடங்களுக்கு முன் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், பெருங்குடி பஞ்சாயத்து சாலை உள்ளிட்ட சில இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படாமல் தற்காலிகமாக  சாலையோரம் பள்ளம் எடுக்கப்பட்டு மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. தற்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும் பஞ்சாயத்து சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் சாலை வெள்ளக்காடாக மாறும் நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த மழைநீர் கால்வாயில் சில அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் கழிவுநீரை இந்த மழைநீர் கால்வாயில் விடுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பெருங்குடி பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 10 வருடங்களாகியும், முறையான மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த மாநகராட்சி சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும்   எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சுகாதார கேட்டில் தவித்து வருகிறோம். மழைக்காலங்களில் கடும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, இப்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கவும், மழைநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : corporation ,
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...