×

கோயம்பேட்டில் மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல்: இணை கமிஷனர் நேரில் ஆய்வு

அண்ணாநகர்: கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து இணை கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு 100 அடி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் இப்பகுதிகளில் எப்பொழுதும் வாகன நெரிசல் அதிகமாகவே காணப்படும். மேலும், வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலனுக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பினால் சாலைகளில் கழிவுநீர் தேக்கம், சாலையோர பள்ளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.  இதனால் இவ்வழியாக அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்கள் நீண்டநேர தாமதத்துக்கு பிறகே குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் அவல நிலை இருப்பதாக காவல் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில் கோயம்பேடு 100 அடி சாலையில் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் எழிலரசன், துணை ஆணையர் அசோக்குமார், உதவி கமிஷனர் சுரேந்திரநாத் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஜெய்குமார் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடங்களை வரைபடம் மூலமாக போக்குவரத்து இணை கமிஷனருக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஜெயக்குமார் விளக்கினார். மேலும் அப்பகுதிகளில் கூடுதல் போலீசாரை பணியில் இருக்க இணை கமிஷனர் உத்தரவிட்டார்.  இதேபோல் கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள் மற்றும் சாலையோர பள்ளங்களில் கழிவுநீர் தேக்கம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஜெயக்குமாரிடம் போலீசார் எடுத்து கூறினர். மேலும் அப்பகுதிகளில் சாலைகளை சீரமைக்க காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Tags : city ,Coimbatore ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்