×

கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர் உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜரானதால் பரபரப்பு

உசிலம்பட்டி, டிச. 27: திருப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டவர், உசிலம்பட்டி கோர்ட்டில் நேற்று ஆஜரான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் கணேசன்(40). இவர் தாய், தந்தை இறந்தபின்பு தனது பெரியப்பா சுப்பிரமணி ஆதரவில் வசித்து வந்தார். கணேசனின் தந்தை தொழிலதிபர் என்பதால் இவரது சொத்துக்கள் அனைத்தைம் பெரியப்பா வசம் இருந்துள்ளது. இவரை பெரியப்பா மற்றும் பெரியம்மாள் தேவகி குடும்பத்தினர் சொத்துக்காக அடிமைப்படுத்தியும், கொத்தடிமையாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூருக்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்ற மதுரை உசிலம்பட்டி கொப்பிலிபட்டியைச்சேர்ந்த கார்த்திகைசாமி என்பவருடன் கணேசன் நண்பரானார். அப்போது தன்னை பெரியப்பா குடும்பத்தினர் சொத்துக்காக கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை எப்படியாவது மீட்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து கார்த்திக் உதவியால் கணேசன் உசிலம்பட்டி வந்துள்ளார்.

இதையறிந்த கணேசனின் உறவினர் ராமராஜ், உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் தனது அக்கா மகன் கணேசனை சிலர் கடத்தி வந்ததாக புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், உசிலம்பட்டி கோர்ட் 2 நீதிபதி ராஜேஸ்கண்ணா முன்னிலையில் கணேசன் தனது வக்கீல்களுடன் நேற்று ஆஜரானார். தன்னை யாரும் கடத்தவில்லையென்றும், தனது பெரியப்பா மற்றும் உறவினர்கள் மூலம் ஆபத்து இருப்பதால் உசிலம்பட்டி வந்ததாக தெரிவித்தார். இதனால், கணேசன் எங்கு இருக்க விரும்புகிறாரோ, அங்கு இருக்கட்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : kidnapper ,Usilampatti Court ,
× RELATED சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது