×

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

சேலம், டிச.27:  இன்று நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீதம் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார். சேலம் மாவட்டம், வீரபாண்டி, மகுடஞ்சாவடி, சங்ககிரி, இடைப்பாடி மற்றும்கொங்கணாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்கும் பணியினையும், வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:  சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் சாதாரண தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று (27ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

வாக்கு பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் வழங்கும் பணிகளையும், வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களை திரும்பபெற்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து வந்து வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்படைக்கும் பணிகளையும், மண்டல அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு பெட்டி வைப்பதற்கு தேவையான பாதுகாப்பு அறைகளை முழுமையாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், கிராம ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையினையும் தனித்தனியாக அமைக்க வேண்டும்.

தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு, அனைத்து பணிகளையும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.  இன்று நடக்கும் முதற்கட்ட தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகளை பாதுகாப்பாக வைப்பதற்கு, 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 12 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, 100 சதவீத ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

Tags : Voters ,elections ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...