×

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் மீண்டும் தலையெடுக்கும் போலி மருத்துவர்கள்

தர்மபுரி, டிச.27: பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில், மீண்டும் தலையெடுத்து வரும் போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான பாப்பாரப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இங்குள்ள கிராம மக்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். அங்கு கிளினிக் வைத்து இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிலர், பள்ளி படிப்பைக்கூட முடிக்காதவர்கள் என்பது அதிர்ச்சி தகவல் ஆகும். இவர்கள், தங்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தை, அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் செலுத்தி விடுகின்றனர்.

இது போன்று தவறான சிசிச்சை அளிப்பதால், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன், இதுகுறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், ஏரியூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த போலி மருத்துவர்களை கண்டறிந்து கைது செய்ததோடு, அவர்கள் நடத்தி வந்த கிளினிக்குகளையும் பூட்டி சீல் வைத்தனர். ஆனால், இதுபோன்று கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்கள், தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்ததும், வேறு இடத்துக்கு கிளினிக்கை மாற்றி வழக்கம் போல், தங்கள் பணியை தொடருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மனித உயிரோடு விளையாடும் போலி மருத்துவர்களைத் தண்டிப்பதற்கு தனி சட்டம் எதுவும் இல்லை.

1956ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், காவல் துறையின் கிரிமினல் குற்ற பிரிவு, மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககத்தின் மருந்துகள் இருப்பு வரையறை ஆகிய 3 பிரிவுகளின் கீழ்தான், பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில், ₹5 ஆயிரம் அபராதம், ஓராண்டு சிறைத் தண்டனை என குறைவான தண்டனைகளே வழங்கப்படுகின்றன. இதனால், போலி மருத்துவர்களை கைது செய்தால், தண்டனை காலம் முடிந்து வெளியே வந்ததும், தங்கள் இருப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி, சிகிச்சை அளிப்பதை தொடர்கின்றனர். இதை தடுக்க, போலி மருத்துவர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேலும், போலி மருத்துவர்கள் மீது சுகாதார துறை அதிகாரிகள் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : doctors ,Pennagaram ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை