×

தொடர் விபத்துகளை தவிர்க்க தொப்பூர் கணவாயில் சாலை விரிவாக்க பணி

தர்மபுரி, டிச.27: தொப்பூர் கணவாயில், தொடர் விபத்துகளை தவிர்க்க ₹2 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் உள்ளது. இருவழிச் சாலையாக இருந்த கணவாய் சாலை, கடந்த 2007ம் ஆண்டு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இருவழிச் சாலையாக இருந்த போது, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் வாகனங்கள் சேதம், உயிர் பலி, பொருட்சேதம் போன்றவை ஏற்பட்டன. தற்போது 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட பின்னரும், ஓரளவு விபத்துகள் குறைந்ததே தவிர, முழுமையாக தவிர்க்கப்படவில்லை. தர்மபுரியில் இருந்து 24வது கிலோமீட்டரில் குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி உள்ளது. இங்கிருந்து பூரிக்கல் ஜங்சன், ஆஞ்சநேயர் கோயில், வனத்துறை பூங்கா, தடுப்பணை பகுதி, தொப்பூர் வழியாக அனைத்து வாகனங்களும் சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்கின்றன. சுமார் 3 கிலோமீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து உள்ள 3 வளைவுகளில், கனரக வாகனங்கள் செல்வது மிக சிரமமாக உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் சுமார் 5 முதல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல முடியும்.

தினமும் 25 ஆயிரம் வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. குறிப்பாக லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 10 ஆயிரம் வரை செல்கின்றன. கனரக வாகனங்கள் மேடான பகுதியில் ஏறுவதை விட, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் தாழ்வான பகுதியில் வரும் போது தான் அதிகமான விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இருந்தும் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு மற்றும் கட்டுப்பாட்டை இழத்தல் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன. ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தால், அந்த வாகனத்தை அப்புறப்படுத்துவதற்குள் பின்னால் வரும் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி, கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில், அடிக்கடி விபத்து நடக்கும் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள அடுத்தடுத்த வளைவுகளை நேராக்கி அகலப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ₹2 கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பாளையம் சுங்கச்சாவடி மூலம், கணவாயில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தொப்பூர் கணவாயில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, ஆஞ்சநேயர் கோயில் அருகே அடிக்கடி விபத்து நடக்கும் இரு சாலை வளைவுகளை நேராக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 10 நாட்களில் நிறைவடையும்,’ என்றனர்.

Tags : Road widening ,canal ,accidents ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...