×

துறையூர் அடுத்த முசிறி ஒன்றியத்தில் உள்ள திண்ணனூர் ஊராட்சியை சேர்ந்தது

துறையூர், டிச.27: துறையூர் அடுத்த முசிறி ஒன்றியத்தில் உள்ள திண்ணனூர் ஊராட்சியை சேர்ந்தது சீரங்கனூர். இந்த கிராமம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியையும், முசிறி ஒன்றியத்தையும் சேர்ந்தது. முசிறி ஒன்றியத்தின் கடைகோடியில் உள்ள இந்த கிராமத்தை முசிறி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக கிராமமக்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு கட்டி முடித்ததிலிருந்து திறக்கப்படாமல் உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பள்ளியை சுற்றி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. மழைக்காலத்தில் அந்த பகுதிக்கு செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தின் அருகே ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் அமைத்தும், தண்ணீர் இருந்தும் திறக்கப்படாமல் உள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தவிர பள்ளிக்கு அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்த சுகாதார வளாகத்தை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், சீரங்கனூரிலிருந்து திண்ணனூர் செல்லும் சாலை அமைத்து 10 ஆண்டுக்கு மேல் ஆனதால் தற்போது சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது.

இந்த சாலை வழியாகத்தான் நாங்கள் இருசக்கர வாகனத்திலும் மற்றும் நடந்து சென்றும் ரேஷன் பொருட்களை திண்ணனூரிலிருந்து வாங்கி வருகிறோம். இந்த ஊரில் 100 குடும்பத்திற்கு மேல் நாங்கள் வசித்து வந்தாலும் எங்களுக்கு தனி ரேஷன் கடை இல்லை. ரேஷன் கடை கட்டித்தர பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்றாலும் திண்ணனூருக்கு 3 கி.மீ. வரை நடந்தும், இருசக்கரவாகனத்திலும் சென்றுதான் வாக்களிக்க வேண்டும். அப்படியே பஸ்சில் செல்ல வேண்டுமானால் நாங்கள் 1 கி.மீ. நடந்து கரட்டாம்பட்டி, புத்தனாம்பட்டி செல்லும் சாலைக்கு சென்று பஸ் ஏறி இலுப்பையூர் வழியாக திண்ணனூர் சென்று இறங்கி வாக்களிக்க வேண்டும்.

மேலும் இக்கிராமத்திற்கு சரியான நேரத்திற்கு பஸ்களும் வருவதில்லை. 3, 4 மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பஸ்கள் இப்பகுதிக்கு வருவதுண்டு. வந்து செல்லும் பஸ்கள் திரும்ப வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படி இல்லையென்றால் திண்ணனூரிலிருந்து சீரங்கனூர் செல்லும் சாலையில் 3 கி.மீ. நடந்தே ஊருக்கு வர வேண்டும். எனவே எங்கள் ஊரிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கும்போது எங்களுக்கு இங்கே ஒரு வாக்குச்சாவடி மையத்தை அமைத்து தர வேண்டும். வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையிலே செல்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர். எனவே மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். ரேஷன் கடையை ஊரிலேயே அமைத்து தர வேண்டும். இக்கோரிக்கைகளை சம்மந்தபட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Thirunoor ,Thinnanur ,Musiri Union ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு