×

வாக்காளர் பட்டியல் வரையறையில் குளறுபடி வாடிப்பட்டி கிராமம் பெயர் இல்லாததால் மக்கள் மறியல்

மணப்பாறை, டிச.27: மணப்பாறை அருகே தேர்தல் வாக்காளர் பட்டியல் வரையறையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் வாடிப்பட்டி கிராமம் முழுமையாக பட்டியலில் இல்லை என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று 27ம் தேதி நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில், 95,406 வாக்காளர்களை கொண்ட மருங்காபுரி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 19 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 49 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 363 ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நடைபெறும் தேர்தலில், வளநாடு பகுதியில் உள்ள வாக்காளர்கள் வரையறை பட்டியலில் குளறுபடி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். வளநாடு ஊராட்சிக்குடபட்ட 2வது வார்டு பகுதியான வாடிப்பட்டி வாக்காளர்களின் பெயர்கள், தற்போது வெளியாகியுள்ள பூத் பட்டியலில் தோப்புப்பட்டி மற்றும் வளநாடு சிவன்கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பிரித்து சேர்க்கப்பட்டிருப்பதாகவும், பட்டியலில் வாடிப்பட்டி என்ற பெயரே இல்லை என்றும் கூறும் வாடிப்பட்டி கிராம மக்கள் வளநாடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டிஎஸ்பி., குத்தாலலிங்கம், மருங்காபுரி தாசில்தார் சாந்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் நிவாசபெருமாள் ஆகியோர் ஊர் மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். முதலில் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்காத வாடிப்பட்டி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் நிறைவுக்கு பின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : village ,Vadipatti ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...