×

இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு 226 வாக்குச்சாவடி பதற்றமானவை

தஞ்சை, டிச. 27: தஞ்சை மாவட்டத்தில் இன்று நடக்கும் முதல்கட்ட தேர்தலில் 226 வாக்குச்சாவடிகளும், 2ம் கட்டமாக வரும் 30ம் தேதி நடைபெறும் தேர்தலில் 345 வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதை இணையதளம் வழியாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (27ம் தேதி) திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு, பூதலூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் 1,378 வாக்குச்சாவடிகளில் 6,61,330 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதேபோல் வரும் 30ம் தேதி 2ம் கட்டமாக தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1,390 வாக்குச்சாவடிகளில் 6,89,738 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரால் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 27ம் தேதியில் 226 வாக்குச்சாவடிகளும், 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் வரும் 30ம் தேதியில் 345 வாக்குச்சாவடிகளும பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தம் 571 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், அறிவுரைகளின்படி 273 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் இணையதளம் வழியாக கண்காணிக்கவும், 192 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவும், மீதமுள்ள 106 வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு வங்கியில், நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் நுண் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ளனர்.
இந்நிலையில் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய பார்வையாளர் அனீஷ் சேகர் மற்றும் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், திட்ட இயக்குனர் பழனி, முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், வேளாண் இணை இயக்குனர் ஜெஸ்டின், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : round ,voting ,polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...