×

தஞ்சையில் சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டது

தஞ்சை, டிச. 27: சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு நேற்று காலை 8.08 மணியளவில் துவங்கி காலை 11.18 வரை நீடித்தது. 9.35 மணியளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தது. இந்த முழு கிரகண வடிவம் 3 நிமிடங்களுக்கு நிலை பெற்றிருந்தது. அதற்கு பிறகு நிலவு, சூரியனை மட்டுமே மறைத்தது. அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றியது.
நிலவு சூரியனை கடந்து சென்ற இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சியளித்தது. இதையொட்டி தஞ்சையில் பெரிய கோயிலில் நடை அடைக்கப்பட்டது. பொதுவாக மார்கழி மாதத்தில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் சூரிய கிரகணம் என்பதால் நேற்று மதியம் 12 மணி வரை நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து உச்சிகால பூஜை செய்யப்பட்டது. அதன்பின் மதியம் 2 மணிக்கு கோயில் நடையை மூடி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

இதேபோல் தஞ்சை கொங்கணேஸ்வரர் கோயில், தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் மதியம் 12 மணிக்கு பிறகே நடை திறக்கப்பட்டது. சூரிய கிரகணத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல பள்ளிவாசல்களில் கிரகண தொழுகை நடந்தது. வல்லம் ஜீம்ஆ பள்ளிவாசலிலும் கிரகண தொழுகை நடைபெற்றது. கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் காலை 8.10 மணிக்கு துவங்கிய சூரிய கிரகணம் மெல்ல மெல்ல நகர்ந்து காலை 10 மணி அளவில் முழு வலைய சூரிய கிரகணமாக தெரிந்தது. இதனால் நகர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சூரிய கிரகணத்தையொட்டி நகரின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, பெரிய கடைத்தெரு, கும்பேஸ்வரர் கோவில் வடக்குவீதி உள்ளிட்ட முக்கியமான இடங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.  

கிரகணம் முடிவடைந்த பின்னர் கும்பகோணத்தில் உள்ள காவிரி ஆறு, மகாமக குளம் உள்ளிட்ட தீர்த்தங்களில் பொதுமக்கள் நீராடி அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். சூரிய கிரகணத்தால் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நவக்கிரக கோயில்கள், ஆதிகும்பேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில், ராமசாமி கோயில், சோமேஸ்வரர் கோயி்லகளில் நடைகள் சாத்தப்பட்டிருந்தது.

Tags : Tanjore ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...