×

ஸ்பிக்நகர் அருகே ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

ஸ்பிக்நகர், டிச. 27:  தூத்துக்குடி அருகே ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக மாறி தொற்றுநோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு டிசம்பரில் தொடரும் மழையால் தாழ்வான பகுதிகள், மழைநீரில் மிதக்கின்றன. ஆங்காங்கே மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், தொடர்ந்து பெய்யும் மழையால் அடுத்தடுத்த நாட்களில் மழைநீர் சூழ்ந்து விடுகிறது. ஸ்பிக்நகர் அருகே உள்ள சாந்திநகரில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள 3வது தெருவில் மழைநீர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கி நிற்கிறது. மேலும் குடிநீர் குழாயில் உடைப்பும் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால், கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக மாறி தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்தவர்கள், அடுத்தடுத்து மர்ம காய்ச்சலுக்கும், தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களுக்கும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இருந்தாலும் போதுமான வாறுகால் வசதி இல்லாததால் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கிய நிலையில் காணப்படுகிறது. சாந்திநகர் 3வது ெதருவில் தேங்கியுள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பலர் தொற்றுநோய்களுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : public ,Spiknagar ,
× RELATED பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!