×

அடைக்கலாபுரத்தில் மழைக்காலங்களில் சாலையில் பெருக்கெடுக்கும் வெள்ளநீர்

உடன்குடி, டிச. 27:  அடைக்கலாபுரத்தில் மழைக்காலங்களில் சாலையில் செல்லும் வெள்ளநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே உயர்மட்டம் பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மெஞ்ஞானபுரம் அருகே ராசுப்பிரமணியபுரத்தில் இருந்து நங்கைமொழி, ஆனையூர் வழியாக அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள சடையநேரிகுளத்திற்கு தண்ணீர் செல்கிறது. மெஞ்ஞானபுரத்தில் இருந்து அடைக்காலபுரம் செல்லும் வழியில் சடையநேரிகுளத்திற்கு தண்ணீர் செல்ல சிறிய அளவிலான தரைமட்டம் பாலம் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.

மழைக்காலங்களில அதிகளவு வெள்ளநீர் சடையநேரிகுளத்திற்கு செல்லும்போது இந்த சாலையின் மேலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்நேரங்களில் அடைக்கலாபுரம், வேப்பங்காடு, மேலராமசாமியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்படுகிறது. அதிகளவு தண்ணீர் செல்லும் போது இருசக்கர வாகனம், கார், வேன் என எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.இந்த வழித்தடத்தில் சரிவர அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள், உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தும் அரசு அதிகாரிகள் யாரும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வரும் மழைக்காலத்திற்கு முன்பாவது இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வண்ணம் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : flooding ,road ,Adakalapuram ,season ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி