×

கடையம் அருகே சாலை சேதமடைந்ததால் குவாரி லாரிகள் சிறைபிடிப்பு பொதுமக்கள் மறியல் முயற்சி

கடையம், டிச.27:  கடையம் அருகே குவாரியிலிருந்து செல்லும் லாரிகளால் சாலை சேதமடைவதாகக் கூறி பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து மறியலில் ஈடுபட முயன்றனர். கடையம் ஒன்றியம் மடத்தூர் ஊராட்சிக்குட்பட்டது தீர்த்தாரப்பபுரம். இந்த கிராமத்தில் 2 தனியார் கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து கல் மற்றும் எம்சேண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் பாப்பான்குளம் சாலை வழியாகச் சென்று வந்தன. இந்நிலையில் அந்த சாலை சேதமடைந்ததால் தீர்த்தாரப்பபுரம் ஊருக்குள் நுழைந்து செல்லத் தொடங்கின. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. மேலும் சாலையும் சேதமடைந்தது.

இதுகுறித்து குவாரி உரிமையாளர்களிடம் கூறியும் லாரிகளை ஊருக்குள் வழியாக செல்வதை நிறுத்தவில்லை. நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஊருக்குள் வந்த லாரியை சிறைபிடித்ததோடு சாலையில் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்ததும் ஆழ்வார்குறிச்சி எஸ்ஐக்கள் காஜாமுகைதீன், இருளப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், லாரிகள் ஊருக்குள் வருவதை நிறுத்த வேண்டும், குவாரிகளில் அளவுக்கு அதிகமாக வெடிமருந்து வைப்பதால் வீடுகள் சேதமடைகின்றன. எனவே வெடி வெடிப்பதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
குவாரி உரிமையாளர்கள் சாலையை சீரமைத்துத் தருவதாகவும்,  ஊருக்குள் லாரிகள் வராது என்றும், குவாரிகளில் வெடிமருந்து குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : civilians ,road ,shop ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி