×

வள்ளியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஜோர்

வள்ளியூர், டிச.27:   தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை பொருட்கள் விற்பனை வள்ளியூர் பகுதியில் ஜோராக நடக்கிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் இவற்றை கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கின்றனர். தமிழகத்தில் புகையிலை மற்றும் பான் மசால் பாக்குகள் கடைகளில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி பறிமுதல் செய்து வந்தனர். வள்ளியூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்த போது பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் முழு மதிப்பையும் காட்டாமல் குறைத்து காட்டி பதுக்கல் வியாபாரிகளை தப்பிக்க வைத்துள்ளனர் என்ற குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலைகள் நகர் பகுதி கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடைகளில் மீண்டும் புகையிலை, பாக்கு விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. தடைசெய்யப்பட்ட பாக்கு ரூ.10 முதல் ரூ.15வரையிலும், புகையிலை ரூ.12 முதல் ரூ.20 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வள்ளியூர் பேரூந்து நிலையம், மெயின்ரோடு கடை வீதிகள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி அருகிலுள்ள பெட்டிக்கடைகளிலும் எந்த விதமான அச்சமின்றி சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்கின்றனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரிந்தேதான் இவை விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலா–்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வள்ளியூர் வழக்கறிஞர் தில்லைராஜா கூறுகையில், வள்ளியூர் பகுதிகளில் பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுவர்கள் பாக்கு, புகையிலை கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையாகியுள்ளனர். இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் போதையில் ஒருவருக்கொருவர் அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசு, பெற்றோர் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். மேலும் புகையிலை பொருட்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் தடை செய்யப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை விற்பனை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : Jore ,area ,Valliyoor ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...