×

ராதாபுரம் பகுதியில் கொட்டப்படும் கேரள கெமிக்கல் கழிவுகள்

ராதாபுரம், டிச.27:  ராதாபுரம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கெமிக்கல் கழிவுகளை தின்ற ஆடுகள் பரிதாபமாக இறந்தன.கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் அபாய மருத்துவக்கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆலங்குளம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் பாலங்களில் வீசப்பட்டு வருகின்றன. ஆலங்குளம், பணகுடி பகுதியில் கழிவுகளை கொட்டும் போது பொதுமக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் சாலையோரங்களில் கழிவுகள் கொட்டுவது தொடர்ந்தது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் கூடங்குளம் செட்டிக்குளம் அருகேயுள்ள ரங்கநாராயணபுரத்தில் சில தினங்களுக்கு முன் 2 கேரள மாநில லாரிகள் கழிவுகளை கொண்டு வந்துள்ளன. இதனை அப்பகுதி மக்கள் மறித்து சிறைபிடித்தனர். லாரியில் கொண்டு வரப்பட்ட சுமார் 30 டன் அளவிற்கு கோழி கழிவுகளும், குப்பைகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2வது நாளும் வந்த ஒரு கேரள கழிவு லாரியை பொதுமக்கள் பிடித்தனர். கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா மற்றும் போலீசார் லாரி டிரைவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் ராதாபுரம் அருகே வள்ளார்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது 21 ஆடுகள் அங்குள்ள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. திடீரென்று ஆடுகள் வாயில் நுரைதள்ளியவாறு ஒன்றன்பின் ஒன்றாக இறந்து விழுந்தன. இதுபற்றி விவசாயிகள் ஆடுகள் மேய்ந்த பகுதிகளை பார்த்தபோது அப்பகுதியில் வெள்ளையாக கெமிக்கல் பொருட்கள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அவைகளை புற்களோடு மேய்ந்த ஆடுகள் இறந்து போனதும் தெரியவந்துள்ளன. இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள கெமிக்கல் கழிவுகள் கேரள பகுதியில் இருந்து இங்கு கொட்டபட்டிருக்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். தகவலறிந்த ராதாபுரம் தாசில்தார் செல்வன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அவர்களிடம் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இறந்து போன ஆடுகளுக்கு நிவாரணம் தருவதுடன் இந்த கெமிக்கல் பொருட்களை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வித்துள்ளனர். இதுகுறித்து கால்நடை துறை மாவட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kerala Chemical Wastes ,
× RELATED ராதாபுரம் பகுதியில் கொட்டப்படும் கேரள கெமிக்கல் கழிவுகள்