×

இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு 999 பதவிக்கு, 3,088 வேட்பாளர் போட்டி

திருப்பூர், டிச.27: திருப்பூர் மாவட்டத்தில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதில், 999 பதவிகளுக்கு, 3,088 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நான்கு லட்சத்து, 59 ஆயிரத்து, 240 வாக்காளர் வாக்களிக்க உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. திருப்பூர், ஊத்துக்குளி, பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஒன்றியங்களில், இன்று தேர்தல் நடக்கிறது. 2ம் கட்டமாக, அவிநாசி, பொங்கலுார், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களில், 30ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு 17, 13 ஒன்றியங்களில் உள்ள, ஒன்றிய வார்டுகள் 170, ஊராட்சி தலைவர் 265, வார்டு உறுப்பினர் 2,295 என 2,747 பதவிகள் மாவட்டத்தில் உள்ளன. அவற்றில், 11 ஊராட்சி தலைவர் மற்றும் 490 வார்டு உறுப்பினர்கள், போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடக்கும், ஏழு ஒன்றியங்களில், 1,250 பதவிகள் உள்ளன.

247 ஊராட்சி வார்டுகள், நான்கு ஊராட்சி தலைவர் என, 251 பதவிகளுக்கு, வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மீதியுள்ள, 999 பதவிகளுக்கு, 3,088 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தின், ஊரகப்பகுதியில் மட்டும், ஒன்பது லட்சத்து, 97 ஆயிரத்து, 765 வாக்காளர் உள்ளனர். அவர்களில், இரண்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 996 ஆண்கள், இரண்டு லட்சத்து, 32 ஆயிரத்து, 211 பெண்கள், 33 திருநங்கைகள் என, நான்கு லட்சத்து, 59 ஆயிரத்து, 240 வாக்காளர், இன்று நடக்கும் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.மாவட்டத்தில் உள்ள, 1704 வாக்குச்சாவடிகளில், 784 வாக்குச்சாவடிகளில், முதல்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம், 13 ஆயிரத்து, 561 தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டு, இரண்டு கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை, 7 மணி முதல் மாலை 5 வரை நடக்க உள்ளது. அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர், தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ள, ‘பூத் சிலிப்’ மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களில், ஏதாவது ஒன்றுடன் சென்று ஓட்டளிக்கலாம்.



Tags : round ,voting ,candidate contests ,
× RELATED 4வது சுற்றில் ரைபாகினா