×

மாணவ மாணவிகள் ஏமாற்றம் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய கிரகணம் தெரியவில்லை

திருப்பூர்,டிச.27:தமிழகத்தில் கோவை,நீலகிரி,திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நேற்று வளைய சூரிய கிரகணத்தை தெளிவாக கண்டு ரசிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளி மாணவிகளுக்கு சூரிய கிரணகனத்தை பார்வையிடுவதற்காக கண்ணாடிகள் மற்றும் வான் நோக்கிகள் ஆகியவைகளை பல்வேறு அறிவியல் அமைப்புகள் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். திருப்பூரில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.மேலும் மாநகரில் சில பள்ளிகளில் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்வையிட வான் நோக்கிகள் பொருத்தப்பட்டிருந்தது. காலை 8 மணி முதலே பள்ளிகளுக்கு மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வரத்தொடங்கினர். ஆனால் திருப்பூர் பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் சூரிய கிரகணத்தை பார்வையிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சூரிய கிரகணத்தை காண வந்த மாணவ,மாணவிகள்,பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உடுமலை:உடுமலை கலிலியோ அறிவியல் கழகம்,உடுமலை சுற்றுச்சூழல் மன்றம்,உடுமலை தேஜஸ் ்ரோட்டரி சங்கம், உடுமலை ராயல்ஸ் அரிமா சங்கம் உள்ளிட்டவை சார்பில் நேற்று சூரிய கிரகணத்தை பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காண உடுமலை நேதாஜி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிரகணத்தின் போது சூரியனை விட 400 மடங்கு சிறிய நிலா எவ்வாறு சூரியனை மறைக்கிறது என்பது குறித்து கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.காலை 9.28மணிஅளவில் நிலவானது சூரியனை 90 சதவீதம் முழுமையாக மறைத்தது. இதையடுத்து காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை கண்ணாடி மூலமும், தொலைநோக்கி மூலமும், பந்து கண்ணாடி மற்றும் ஊசித்துறை கேமரா வழியாகவும் வளை சூரிய கிரகணத்தை பொதுமக்கள் நன்றாக கண்டு களித்தனர்.காங்கயம்: காங்கயத்தில் சில நாள்களாக மேக மூட்டத்துடன், சூரியனே தெரியாமல் இருந்து வந்தது. நேற்று காலையும் வானிலை அப்படித்தான் இருந்தது. காலை 9 மணியளவில், மழை வருவது போன்ற வானம் இருண்டு கொண்டு வந்தது. ஆனால், அரை மணி நேரம் கழித்த பின்னர், சூரிய கிரகண நேரத்தில் அடர்ந்த கரிய நிற மேகத்துக்கு நடுவில் சூரியன் தெரிந்தது. அதில் சூரியனை நிலவு மறைக்கும் அற்புத நிகழ்வும் தெரிந்தது. அப்போது சாலையில் சென்றவர்கள் தங்களது செல்போனில் இந்த அரிய காட்சியை ஆர்வத்துடன் படம் எடுத்துக் கொண்டனர். 10 நிமிடம் மட்டுமே சூரியன் தெரிந்தது. அதன் பின்னர் வழக்கம்போல கரிய மேகம் மட்டுமே இருந்தது.

Tags :
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது