விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பு

விழுப்புரம், டிச. 27:    பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 ரொக்கப்பணம் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மாவட்டத்திலுள்ள  அனைத்து ரேஷன்கடை களுக்கும் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. 5ம் தேதிக்கு பிறகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஆண்டுதோறும் தைப் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் குடும்பத்தினர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் சென்று பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் அறிவிப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். இதில் 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கப்படும். இதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சர்க்கரை அட்டைதாரர்கள், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் பலர் இந்த திட்டத்தில் பயனடைவார்கள். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பொங்கல் பரிசு பணம் வழங்கும் திட்டத்தை முன் கூட்டியே எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு, ரொக்கப் பணத்தை வழங்க உணவு கூட்டுறவு துறையினர் முன்னேற்பாடு செய்து வந்தனர்.  இந்நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த சமயத்தில் பொங்கல் பரிசு பணம் வழங்குவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து 27 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல்நடை பெறாத சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல்நடைபெறும் மாவட்டத்தில் வழங்கக்கூடாது எனவும்தடைவிதித்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து தமிழக அரசு முன்கூட்டியே பொங்கல் தொகுப்பு வழங்கும் முடிவை கைவிட்டது.  இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு, பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை அந்தந்த மாவட்ட நுகர்பொருள் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று முதல் ரேஷன் கடைகளுக்கு இந்த பொருட்கள் லாரிகள் மூலம் ஏற்றிக்கொண்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,115 ரேஷன்டைகளுக்கும் அரிசி, சர்க்கரை அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.1000 ரொக்கப்பணம் அந்தந்த மாவட்டங்களுக்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 5ம் தேதிக்கு பிறகு இந்த பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Villupuram ,shops ,Kallakurichi ,
× RELATED சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து