×

ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடலூர், டிச. 27: கடலூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக இன்று (27ம் தேதி) மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்,   மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நேர்முக தேர்தல் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் நடைபெறும் இத்தேர்தலில் 6,039 பதவிகளுக்கு 16,604 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு ஒன்றிய கவுன்சிலர் உள்பட 815 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. 3,165 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம் முழுவதும் உள்ள கிராமங்களில் 175 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு அலுவலர், மண்டல அலுவலர் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் தேர்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டனர்.மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நேற்று இதற்காக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தயார் நிலையில் இருந்தனர். வாக்குச் சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்கு பதிவுக்கான பல வகை பொருட்கள் மூட்டையாக கட்டப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான பொருட்கள் லாரி, வேன் போன்றவற்றில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மட்டுமல்லாது, பல்வேறு வாக்குச் சாவடிகளை ஒன்றிணைத்து அதை கண்காணிக்கும் வகையில் ரோந்து பணிக்கான போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதுபோல் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 177 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த 177 வாக்குச்சாவடிகளிலும் இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளது. இதுபோல் மேல்புவனகிரி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட உள்ளது.இந்நிலையில், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, புவனகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Security Elections ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது