பெண் ஆசிரியர்களுக்கு 20 கி.மீ. சுற்றளவில் பணி நியமன முறை தோல்வியில் முடிந்தது

ஈரோடு, டிச.27:  ஈரோடு மாவட்டத்தில் வாக்குசாவடி பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலக ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு வாக்குசாவடியில் வாக்குசாவடி தலைமை அலுவலருடன் சேர்த்து 7 பேர் முதல் அதிகபட்சம் 8 பேர் வரை பணியாற்ற உள்ளனர்.  அதன்படி, மாவட்டத்தில் 1,576 வாக்குசாவடிகளில் 11,579 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், இன்று (27ம் தேதி) நடைபெறும் முதல்கட்ட பணியில் மட்டும் 4,645 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் புதிய முயற்சியாக பெண் ஆசிரியர்களுக்கு அவர்களின் வாழ்விட முகவரியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவிற்குள் இருக்கும் வாக்குசாவடியில் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இதேபோல், ஆண் ஆசிரியர்கள் 40 கி.மீ. சுற்றளவில் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக, ஆசிரியர்களின் முகவரியுடன் கூடிய முழு விபரமும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில், நேற்று பணி நியமன ஆணை பெற்ற பெண் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. 20 கி.மீ. சுற்றளவில் வாக்குசாவடி பணி நியமனம் இருக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், 50 முதல் 75 கி.மீ. தொலைவிற்கு பெண் ஆசிரியர்கள் தூக்கியடிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே, பணிக்கான தேர்வு முறையில் குளறுபடி நடந்ததால் அதிருப்தியில் இருந்த ஆசிரியர்களுக்கு தற்போது வாக்குசாவடி பணி நியமனத்திலும் குளறுபடி நடந்துள்ளதால் மாநில தேர்தல் ஆணையம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags : teachers ,
× RELATED இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்