×

குன்னூர் கன்டோன்மென்ட் தேர்தல் துணை தலைவர் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை அமல்

ஊட்டி, டிச. 27:  இந்தியாவில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட்டுகளுக்கு துணை தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.    தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்குட்பட்ட பகுதிகளும், சென்னை பரங்கிமலை, திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலைக்குட்பட்ட பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் 7 வார்டுகள் உள்ளன. தற்போது 6 கவுன்சிலரும், ஒரு துணை தலைவரும் உள்ளனர். இந்நிலையில், ராணுவ அதிகாரிகளிடம் உள்ள அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசிடமும், ராணுவ அமைச்சகரத்திடமும் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனேயில் கன்டோன்மென்ட் துணை தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.   அப்போது அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது, மக்கள் பிரதிநிதிகளுக்கு என சிறப்பு அதிகாரம் அளிக்க வேண்டும் என துணை தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு மற்றும் ராணுவ அமைச்சகம், இதுவரை இருந்த சட்டத்தை தற்போது மாற்றி அமைத்துள்ளது. இனி வரும் காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இதன்படி, இனி வரும் காலங்களில் துணை தலைவர் மறை முகமாக தேர்வு செய்யப்படாமல், நேரடியாக மக்கள் அளிக்கும் ஓட்டுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தலைவர் (ராணுவ அதிகாரி), துணை தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் நியமன உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாக குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழு வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் உட்பட தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றுள்ளது. கன்டோன்மென்ட் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மாநில அளவில் அல்லது தென்னிந்திய அளவில் பணி மாற்றம் செய்யும் அதிகாரமும் இந்த நிர்வாக குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.   இது குறித்து வெலிங்கடன் கன்டோண்மென்ட் போர்டு துணை தலைவர் பாரதியார் கூறுகையில், ‘‘இதுவரை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலை இருந்தது. அனைத்துமே ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து வந்தனர். அதற்கு நாங்கள் ஒப்புதல் அளித்து வரும் நிலை இருந்தது. இதனால், மக்களுக்காக நாங்கள் எவ்வித நலத்திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனை மாற்ற வேண்டும். எங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என தொடர்ந்து ராணுவ அமைச்சகத்தை வலியுறுத்தி வந்தோம். இதன் பயனாக, தற்போது எங்களுக்கும் நிர்வாகத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மக்களுக்காக நாங்கள் முழுமையாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது,’’ என்றார்.

Tags : election ,Vice President ,Coonoor Cantonment ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!