×

வாக்குச்சாவடி மாற்றத்தை எதிர்த்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், டிச. 27: திருவள்ளூர் அடுத்த நாராயணபுரத்தில் எம்எல்ஏ, எம்பி தேர்தலில் வாக்குச்சாவடி இருந்தும், உள்ளாட்சி தேர்தலில் அருகில் உள்ள மஞ்சங்குப்பம் கிராமத்துக்கு மாற்றப்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது பட்டறைபெரும்புதூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பட்டறைபெரும்புதூர், நாராயணபுரம், மஞ்சங்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன.  கடந்த எம்எல்ஏ மற்றும் எம்பி தேர்தலின்போது, நாராயணபுரம் கிராம மக்கள் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 66) வாக்களித்து உள்ளனர்.  இந்நிலையில், ஊராட்சி தேர்தலுக்கு பூத் எண், 66யை அருகில் உள்ள மஞ்சங்குப்பம் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மாற்றியுள்ளனர்.

இதையறிந்த நாராயணபுரம் கிராம மக்கள், எங்களது கிராமத்தில் உள்ள பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். இல்லையேல் தேர்தலை புறக்கணிப்போம் என கூறி நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து தாலுகா போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தேர்தல் நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து,  கலைத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,’’எங்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.  இதனால் நாளை (இன்று) நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

Tags :
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே டயர்...